“தமிழ்நாட்டில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தூய ஆட்சி, தூய்மையானவர்களுக்கான ஆட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, மொத்தமாகச் சுருட்டுகின்ற ஆட்சியாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஊழலின் மகாசக்தியாகவும், பராசக்தியாகவும் விளங்குவதற்குப் பழனி மற்றும் கரூர் நில விவகாரங்களே சாட்சி” என்று முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். ரகுபதி கடுமையாகச் சாடியுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பழனி, கரூர் பத்திரப் பதிவு மோசடி: அரசு உடந்தையா?
செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ். ரகுபதி தெரிவித்ததாவது: “பழனி கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் விற்கப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்பட்டதும்; கரூரில் முதலமைச்சர் விஜய் சென்று வந்த கையோடு ஒரே நாளில் 3508 ஏக்கர் நிலங்கள் அவசர அவசரமாகப் பதிவு செய்யப்பட்டதும் இந்த லஞ்சம் வாங்காத உத்தமர் ஆட்சியின் லட்சணத்தைக் காட்டுகிறது. பழனியில் நிலப் பதிவைத் தடுக்க முயன்ற துணை ஆணையர் மற்றும் சார்பதிவாளரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு, தங்களுக்குச் சாதகமான ஒருவரை நியமித்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
இதற்கு முதலமைச்சர் விஜய்யின் அரசு உடந்தையா இல்லையா? கரூரில் தவெகவில் இணையவுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பினாமிகளுக்கு உதவவே, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் ஒரே நாளில் 3500 ஏக்கருக்கும் அதிகமான கோயில் நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. இதை இல்லை என்று மறுக்க உத்தமர் விஜய் தயாரா?”
“ஆறாவது நிமிடம் பேசியிருந்தால் நாற்றம் தெரிந்திருக்கும்!”
கொளத்தூர் பரப்புரையின் போது முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து விமர்சித்த ரகுபதி: “ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் தங்களுக்குக் கொத்து புரோட்டா போட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அவர் எழுதி வைத்ததை ஐந்து நிமிடம் மட்டும் படித்துவிட்டுப் புத்திசாலித்தனமாகத் தப்பித்து ஓடிவிட்டார். ஆறாவது நிமிடமும் விஜய் பேசியிருந்தால் அவரது நாற்றம் தெரிந்திருக்கும். அங்கிருந்தவர்கள் இவருக்கா ஓட்டு போட்டோம் என்று ஓடிப் போயிருப்பார்கள்.
அப்படி நடந்திருந்தால் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பார். கரூரில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு ஓர் அடக்கமான பேச்சோ, முதலமைச்சருக்கு உண்டான தகுதியோ கொண்டதாக இல்லை. அது வெறும் இறுமாப்பு, ஆணவம் மற்றும் அகந்தையின் வெளிப்பாடு. மேடையில் ‘ஓடு ஓடு’ என்று முதலமைச்சர் பாடி நடனம் ஆடுவதைப் பார்த்து மற்ற மாநிலத்தவர் கேலி செய்கின்றனர்.”
குட்கா விற்பனை மற்றும் மணல் கடத்தல் புகார்கள்:
தொடர்ந்து பேசிய அவர், “கரூரில் ‘விஜய் எங்க அண்ணன், தம்பி, லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள்’ என்று விஜய் பேசியதை நம்பி, நாகர்கோவில் கிளைச் சிறையில் லஞ்சம் தர மறுத்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தவெக ஆட்சியில் அண்ணன், தம்பி என்று சொன்னால் உயிரிழந்துதான் போகிறார்கள். தற்போது எங்கு பார்த்தாலும் தவெகவினர் குட்கா விற்கின்றனர். எனது திருமயம் தொகுதிக்குட்பட்ட பரளி, குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தவெகவினர் பகிரங்கமாக மணல் கடத்துகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், ‘மேலிடத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று உத்தரவு வந்திருப்பதாகக் கூறுகின்றனர். லஞ்சம் வாங்காத விஜய் சார்… அந்த மேலிடம் யார்? சிறுவர்களை ஏமாற்றி வாக்கு வாங்கிய விஜய் சார்… அந்த மேலிடம் யார் என்பதை விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
நிர்வாகச் சீர்குலைவு மற்றும் வழக்கறிஞர் பதவி ஏலம்:
“தவெக அரசில் அமைச்சர்களுக்குத் தங்களின் பணி என்னவென்றே புரியவில்லை. தவெகவினர் அரசு விதிமுறைகளை மதிக்காமல், அரசு நிகழ்ச்சிகளைத் தாங்களே முன்னின்று நடத்துகின்றனர். மேலும், தவெகவில் வழக்கறிஞர் அணி இல்லாததால், அரசு வழக்கறிஞர் பதவிகள் ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம் என ஏலம் விடப்பட்டு, அதிகப் பணம் கொடுப்பவர்களுக்குப் பின்னணி பார்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது. திமுக எத்தனையோ சோதனைகளை, மிசாவைச் சந்தித்த இயக்கம்.
13 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதபோதும் பொறுமையாக இருந்து மீண்டும் மக்கள் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த தியாக வரலாறு எங்களுக்கு உண்டு. மக்கள் தவெகவிற்கு ஓட்டளித்ததைப் போலவே, விரைவில் இந்தியாவில் ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம்” என்று முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி தனது பேட்டியில் தெரிவித்தார்.
