Homeசெய்திகள்அரசியல்5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்" – காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி

5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்” – காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி

-

- Advertisement -

“கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்” – சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி அதிரடிப் பேட்டி!

பிரவீன் சக்கரவர்த்தி

we-r-hiring

“தி.மு.க தலைவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை அவர்கள் அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள். கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க ஆட்சியை மக்கள் ஏற்க மறுத்து, தேர்தலில் அவர்களை நிராகரித்து வீட்டில் அமர வைத்துவிட்டனர்” என்று காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு சென்னை திரும்பிய பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூட்டணி ஆட்சியின் முதல் பிரதிநிதி:
“மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றது எனக்குப் பெருமையான தருணம். அதே நேரத்தில், இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்பதையும் உணர்ந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் த.வெ.க – காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரதிநிதியாக நான் செயல்பட உள்ளேன். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தேசிய கட்சி ஆட்சியில் பங்கேற்று இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
​நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரவுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா’ மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ ஆகியவை தமிழ்நாட்டின் உரிமைகளையும், மாநிலச் சுயாட்சியையும் பாதிக்கும் வகையில் உள்ளன. இத்தகைய மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் தீவிரமாகவும், துணிச்சலுடனும் எனது எதிர்ப்பைப் பதிவு செய்வேன். தமிழ்நாட்டின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். என்னை தேர்வு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் எனது நன்றிகள்.

மேகதாது விவகாரம் மற்றும் டெல்லி பிரதிநிதி நியமனம்:
கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, மேகதாது அணைத் திட்டத்தை தமிழக காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கர்நாடகா முதலமைச்சர் டி.கெ. சிவகுமாரை நேரில் சந்தித்து எங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை என்பதால், தேசிய கட்சியாக இதற்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணும் வலிமையும் நம்பிக்கையும் காங்கிரசுக்கு இருக்கிறது. த.வெ.க-வும், காங்கிரசும் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ளன. ‘கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தி.மு.க கூறியதைத் தவறு என நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம். தி.மு.க தனித்து நிற்பதோ அல்லது கூட்டணி வைப்பதோ அது அவர்களின் உட்கட்சி விவகாரம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய புத்துணர்ச்சி:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், “இதன் மூலம் தமிழக காங்கிரசுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைத்துள்ளது. கூட்டணி ஆட்சியில் எங்களுக்கான மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. எனது நண்பர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியைப் புதிய திசையில் வலுப்பெறச் செய்வார். நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது; எங்களின் பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே” என்றார்.

த.வெ.க அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. பெண்களுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் திட்டம்’ வரவேற்கத்தக்க ஒரு முயற்சி ஆகும். இந்த ஒரு மாதத்திலேயே ஊழலற்ற ஆட்சி என்ற நம்பிக்கையை மக்களிடையே த.வெ.க அரசு ஏற்படுத்தியுள்ளது.
​புதிதாக அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்குச் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கச் சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். முந்தைய தி.மு.க ஆட்சியுடன் ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகக் கூறிவிட முடியாது. ஒரு மாத காலத்திற்குள் பல நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, விரைவில் மேலும் முன்னேற்றம் காணப்படும்” என்று பிரவீன் சக்கரவர்த்தி எம்பி பேசினார்.

MUST READ