“நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையில்தான் இந்த புதிய அரசு பயணிக்க முடியும்” – திருச்செங்கோட்டில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி அதிரடிப் பேச்சு!

“தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் அனைத்தும் தி.மு.க வகுத்துக் கொடுத்த பாதையே ஆகும். மாநில உரிமைகளைச் சமரசம் செய்ய மாட்டோம், இருமொழிக் கொள்கைதான் என்பதில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் தளபதி ஸ்டாலினின் கொள்கை ஆளுமைகளே இன்னமும் தமிழகத்தை வழிநடத்துகின்றன” என்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்பி பேசியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணியின் சார்பில் ‘மகத்தான தலைவர் கலைஞர்’ என்ற தலைப்பிலான மாணவர் கருத்தரங்கம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திருச்சி சிவா எம்பி ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
”துருப்பிடிக்கும் அரசு இயந்திரம்” – அண்ணாவின் கவலை:
“இன்றைய இளைஞர் தலைமுறை ஏதோ ஒரு தேர்தல் வந்தது, உணர்ச்சிவசப்பட்டு யார் எவர் என்று தெரியாமலேயே வாக்களித்தோம் என்று எண்ணக்கூடியவர்களாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போது எங்களிடமிருந்த ஆட்சி இன்னொருவருக்குப் போனது என்ற அண்ணாதுரையின் ஆதங்கம் இதுவல்ல, புலம்பலும் அல்ல. மாறாக, அவர்களிடம் இருக்கக்கூடிய ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு இயந்திரம் துருப்பிடித்துப் போய்விடுமே என்ற கவலைதான். ஒரு வாகனம் ஓடாமல் இருந்தாலோ, சரிவரப் பராமரிக்கப்படாமல் போனாலோ, அதனை மீண்டும் சரிசெய்து நீண்ட தூரம் இயக்குவது சிரமம். அதைப்போலத்தான் அரசாங்க இயந்திரமும். அதற்குச் சரியான பராமரிப்பு, சரியான ஓட்டுநர், சரியான உரிமையாளர் இருக்க வேண்டும்.
ஆளுநர் உரையில் ஒலிப்பது தி.மு.க-வின் கொள்கைகளே:
50 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆளுமையை அகற்றிவிட்டோம் என்று சிலர் தற்பெருமை பேசிக் கொள்கிறார்கள். ஆனால், புதிய அரசின் ஆளுநர் உரையை உற்றுக் கேட்டால் உண்மை புரியும். ‘சமூக நீதி தான் இந்த ஆட்சியின் வழிமுறை’ என்று கூறும்போது அங்கே தந்தை பெரியார் வந்துவிடுகிறார். ‘இருமொழிக் கொள்கைதான், இந்தி இல்லை’ என்று கூறும்போது அங்கே பேரறிஞர் அண்ணா வந்துவிடுகிறார். ‘மாநில உரிமைகளைச் சமரசம் செய்ய மாட்டோம்’ எனும்போது முத்தமிழறிஞர் கலைஞரும், ‘புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்’ எனும்போது தளபதி ஸ்டாலினும் வந்துவிடுகிறார்கள். நாங்களோ, எங்கள் கொள்கைகளோ இல்லாமல் தமிழகத்தில் எதுவுமில்லை. இனி எவர் ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையைத் தவிர்த்துவிட்டுப் பயணிக்க முடியாது.
கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு:
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 28 விழுக்காடாக மட்டுமே உள்ளது. அதனை 2035-க்குள் 50 விழுக்காடாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இலக்கு. ஆனால், திராவிட இயக்க ஆட்சிகள் கொடுத்த சலுகைகள் மற்றும் முறையான இடஒதுக்கீடு காரணமாகத் தமிழ்நாட்டில் இப்போதே உயர்கல்விக்குச் செல்வோர் விகிதம் 51 விழுக்காடாக உள்ளது. முதல் தலைமுறையாகப் படித்து, இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும் எளிய மக்கள் உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகமே ஒரே காரணம்.
இது ஒரு இடைவேளை மட்டுமே – மீண்டும் வருவோம்:
ஏதோ ஒரு அரசியல் சூழலில் இன்றைக்கு ஒருவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கலாம். அதற்காக மக்கள் அவர்கள் மீது பெரும் நேசம் கொண்டு முழுமையாக ஆதரித்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை. புதிய அரசுக்கு ‘அப்சல்யூட் மெஜாரிட்டி’ (Absolute Majority) கூட கிடைக்கவில்லை. 117 இடங்களைக் கூட தாண்ட முடியாமல் 107 இடங்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க கூட்டணிக்கு 1 கோடியே 55 லட்சம் மக்களும், அவர்களுக்கு 1 கோடியே 72 லட்சம் மக்களும் வாக்களித்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே வெறும் 17 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.
எனவே, ஒன்றரைக் கோடி மக்கள் ஆதரிக்கும் இயக்கமான தி.மு.க எதையும் இழந்துவிடவில்லை. இது ஒரு தற்காலிக இடைக்காலம், ஒரு சிறிய ‘இடைவேளை’ அவ்வளவுதான். இதற்காகத் தம்பிகள் யாரும் குமுற வேண்டியதில்லை, வருந்த வேண்டியதில்லை. தி.மு.க மீண்டும் கம்பீரமாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும். நம்மைத் தவிர்த்துவிட்டு இன்னொருவர் கையில் தமிழ்நாடு இனி செல்ல முடியாது” என்று திருச்சி சிவா எம்பி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, தி.மு.க மாநில மாணவர் அணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், நகரப் பொறுப்பாளர்கள் நடேசன், கார்த்திகேயன், நகரமன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், அருண்குமார், தாமரைச்செல்வன் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள், மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
