Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால் தவிக்கும்...

தமிழகத்தில் விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால் தவிக்கும் மக்கள்!

-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகப் பொதுமக்களும் வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதித்துள்ளது.

we-r-hiring

அரிசி, பருப்பு விலை கிடுகிடு உயர்வு!

மளிகைக் கடை வியாபாரி ராமமூர்த்தி கூறுகையில், பொதுமக்களின் அன்றாட சமையலுக்குத் தேவையான பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

நல்ல ரக பொன்னி அரிசி மற்றும் சன்ன ரக அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரையும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.60 வரையும் உயர்ந்துள்ளதாகக் கூறினார். அதேபோல், சர்க்கரை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.35 வரையும், பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.35 வரையும் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

சம்பளம் அதேதான்; செலவு மட்டும் அதிகரிக்கிறது!

மூதாட்டி ரங்கநாயகி கூறுகையில், மாதச் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்துபவர்களுக்கு மளிகைப் பொருட்களுக்கான செலவு பெரும் சுமையாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தார். வருமானம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இல்லத்தரசி தேவி உள்ளிட்ட பொதுமக்களும் அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது கடினமாகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இட்லி, தோசை மாவு விலையும் உயருமா?

அரிசி விலை உயர்வால் மாவுக்கடை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இட்லி மாவுக்கான அரிசி மூட்டைக்கு ரூ.300 வரை விலை அதிகரித்துள்ளதாகவும், உளுந்தம் பருப்பின் விலையும் உயர்ந்துள்ளதாகவும் மாவுக்கடை வியாபாரி சூர்யா தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு கிலோ தோசை மாவு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு விலை தொடர்ந்து அதிகரித்தால் மாவின் விலையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் கொள்முதல் அளவைக் குறைத்தனர்!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நுகர்வோரை மட்டுமின்றி, சில்லறை வியாபாரிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மொத்த விற்பனைச் சந்தையிலேயே கொள்முதல் விலை அதிகமாக இருப்பதால், குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் முன்புபோல் அதிக அளவில் பொருட்களை வாங்குவதில்லை என்றும், தங்களது தேவைகளைக் குறைத்துக்கொண்டு செலவுகளைச் சமாளித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இல்லத்தரசி ஜெயந்தியும் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

விலையைக் கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் கோரிக்கை!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்கத் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயராமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

குழந்தைகளை வைத்து தவெக தேர்தல் பிரச்சாரம்: “ரசனை குறைவானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது” – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

MUST READ