விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள ஆரோவில் பகுதியில் நிலப் பரிமாற்ற முறைகேடுகள், நில ஆக்கிரமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம்!
ஆரோவில் மற்றும் அன்னபூர்ணா பண்ணையைப் பாதுகாக்க வேண்டும், ஆரோவில் நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், ஆரோவில் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலப் பரிமாற்ற முறைகேடுகள் மற்றும் நில ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொத்தம் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போலீசாருடன் கடும் வாக்குவாதம்!
போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சங்கத் தலைவர் ஈசன் முருகசாமியுடன் வாக்குவாதம்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமிக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆரோவில் நிலப் பரிமாற்றம் தொடர்பான புகார்கள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி, நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
