
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது என்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்பி . தமிழக கள்ளச்சாராயம் விவகாரத்தில், அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கடுமையாக அரசை சாடி இருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .
அப்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படு தோல்வி குறித்த கேள்விக்கு, கர்நாடகாவில் பாஜக தோற்றுவிட்டது. ஆனால் அக்கட்சித் தலைவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக பேசி வருகிறார்கள். பாஜகவை பொறுத்தவரைக்கும் அவர்கள் வென்றால் தேசியம் வென்றது என்று சொல்கிறார்கள். தோற்று விட்டால் பிரிவினைவாதம் ஜெயித்தது என்று சொல்கிறார்கள். இப்படி அபத்தமான கருத்தினை சொல்லி வருகிறார்கள்.

கர்நாடகாவில் உண்மையில் பாஜகவின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள். இதை பாஜக ஜனநாயக ரீதியாக அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
தமிழக கள்ளச்சாராய விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு , சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் விளிம்பு நிலை மக்கள். அதனால் தான் குறைந்த வருவாய் அவர்கள் ஈட்டி வருவதால் இது போன்ற குறைந்த போதை வஸ்துக்களை உட்கொண்டு துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருமே குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவித்தொகை வழங்கியதை யாரும் குறையாக பார்க்க கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே நேரம், இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படாமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் கார்த்தி சிதம்பரம், சம்பவம் நடந்த பின்னர் ஒரே நாளில் 1500 க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய விற்பனையாளர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை என்பதெல்லாம் நிச்சயம் அதிகார வர்க்கத்தினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கடுமையாக அரசை சாடி இருக்கிறார்.
கூட்டணிக்குள் இருந்தாலும் திமுகவை கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.