சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத பம்புகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், விடிய விடிய மழை பெய்தபோதும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சியில் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தாழ்வான பகுதிகள் – சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றின் தற்போதைய நிலை குறித்து அங்கிருந்த நேரடி கண்காணிப்பு மையத்தில் பார்த்து, அது தொடர்பான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மழை குறித்த புகார்களை தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளின் விவரங்களை கேட்டறிந்து, பொதுமக்களின் தேவைகளை உதவி மையத்தின் வாயிலாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை கேட்டறிந்ததாகவும், மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை என்று தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.