2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப்பெறும் என்று மார்க்ஸிய சிந்தனையாளர் சூரியா சேவியார் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது வலைதள பதிவில், ”2014-2019-2021-2024 ஆகிய நான்கு தேர்தல்களில் எனது கணிப்புகள் மிகச்சரியாக அமைந்ததாலும், அந்த அனுபவங்களிலிருந்து கடந்த ஆறுமாதமாக களத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எனது கருத்துக் கணிப்புகள் கீழ்கண்ட வரையறைகளை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது

1.2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
2.விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்
3.2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
4.இத்தேர்தல் காலங்களில் இருந்த அரசியல் போக்குகள்
5.திமுக ஆட்சியின் மீதான சாதக-பாதகங்கள்
6.திமுக கட்சியின் பலம் மற்றும் பலவீனங்கள்
7.திமுக கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் பலவீனங்கள்
8.அதிமுக பலம் மற்றும் பலவீனங்கள்
9.பாஜகவின் பலம் மற்றும் பலவீனங்கள்
10.தமிழ்நாட்டின் சாதிய ரீதியான அடையாள அரசியல் நகர்வுகள்
11.தமிழ்நாட்டின் மதரீதியான ஒருங்கிணைவுகள்
12.ஒன்றிய ஆட்சியின் மீதான சாதக பாதகங்கள்
13.தவெகவின் அரசியல் நகர்வுகள்
14.நாதகவின் அரசியல் நகர்வுகள
15.தமிழ்நாடு மக்களின் கருத்தியல் ரீதியாக ஒருங்கிணைவும்,அடையாள அரசியல் ரீதியாக ஒருங்கிணைவுகளும்
16.மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிவாரியான பிரத்யேக நிலைமைகள்
1.திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்
திமுக கூட்டணி இயற்கையான கூட்டணி என்ற பார்வை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. திமுக ஆட்சியின் மீதான கூட்டணி கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் சஞ்சலங்கள் மக்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை.
திமுக ஆட்சியின் சமூகநலத்திட்டங்களால் பெரும் ஆதரவு மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. சமூக ஊடகங்களின் தாக்கத்தால் வடமாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிடும் தன்மையில் திமுக ஆட்சி மீது மதிப்பு கூடியுள்ளது.
அதிமுக ஆட்சியை பாஜக நடத்தியது என்பது போல் இல்லாமல், எவ்வித புற அழுத்தங்களும் இன்றி, திமுக ஆட்சி நிர்வாக ரீதியாக தனித்தன்மையோடும், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூட்டுத்தன்மையோடு இயங்குகிறது என்பது வரவேற்புக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
சாதி மற்றும் மதங்களை அரசியல் காரணங்களுக்காக பிணக்குகளை திட்டமிட்டு உருவாக்கும் தன்மையற்ற கூட்டணியாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுவது கூடுதல் பலமாகவும் உள்ளது.
2021 ல் மக்கள் மத்தியில் தன் மீதான நம்பிக்கையை திமுக ஏற்படுத்த முயன்றது. 2026 ல் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்ற தன்மையில் தேர்தல் அணுகப்படுகிறது.
2.அதிமுக மீதான மக்களின் பொதுப் பார்வைகள்
அதிமுக சுயமாக இயங்காமல், பாஜகவின் வழிகாட்டுதலில் இயங்குகிறது என்ற பார்வை பெரும்பாலும் மக்கள் மனநிலையில் பிரதிபலிக்கிறது. அதிமுகவை பாஜக சிதைக்கிறது என்ற பார்வையும்,கட்சியின் அமைப்புகள் பலவீனமானதாகவும் அதிமுக அணிகள் மத்தியில் பெரும் சோர்வு ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் நிலைத் தலைவர்கள் அதிகாரம் சார்ந்த பார்வையுடன் பாஜகவை நெருங்குவதும், திராவிடக் கருத்தியல் கொண்டோர் திமுகவை நெருங்குவதுமாக நகர்கிறது. அதிமுக பொதுக்கட்சி என்றில்லாமல் குறிப்பிட்ட சாதியினருக்கானது என்ற தோற்றம் மேலெழுந்துள்ளது.
பல்வேறு காரணிகள் மக்கள் மத்தியில் பிரதிபலித்தாலும் அதற்கான வாக்கு வங்கி இத்தேர்தலில் 15 முதல் 20 சதம் என்றளவில் நீடிக்கிறது. 2026 தேர்தலில் மேற்கு மண்டலம் தவிர்த்த பிறபகுதிகளில் மேலும் குறைய வாய்ப்பிருக்கிறது.
3.பாஜக அணி
2014 ல் வளர்ச்சியின் நாயகன் என்ற பிம்பத்தோடும், பெரிய அளவில் மோடி மீதான விமர்சனங்கள் எழாத நிலையில்,மோடியை முன்னிறுத்தி 2016 தேர்தலில் பச்சைமுத்துவின் ஐஜேகே கட்சிக்கு 47 இடங்கள் கொடுத்து, மற்ற 187 இடங்களில் தாமரைச் சின்னத்தில் பாஜக போட்டியிட்டு 2.78% வாக்குகளை மட்டுமே பெற்றது. இதிலிருந்தே அது பாடத்தைப் பெற்றது. அக்கட்சியின் உண்மையான வாக்கு சதம் இன்றும் இதுதான்.
அதன் பிறகு ஒன்றிய அதிகார பலத்தோடும், மாநிலக்கட்சிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தியும் ஊடகங்கள் மூலம் தன்னை ஊதிப்பெருக்கி காட்டிக் கொண்டிருக்கிறது.
நாளது தேதியில் தமிழ்நாடு மக்களின் மிகப்பெரிய வில்லனாக மோடி பார்க்கப்படுகிறார் என்பதே களநிலவரமாக இருக்கிறது. வில்லனுக்கான ரேஞ்ச் கூடக்கூட, கதாநாயனுக்கான மதிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உயர்கிறது.
முதல்வருடைய மென்மையான, நிதானமான அணுகுமுறை மற்றும் அரசை நடத்தும் முறையானது, தமிழ்நாட்டில் வாழும் 50% மத்தியதர வர்க்கம் மற்றும் 25% விவசாயத் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மத்தியில் மதிப்பு உயர்ந்துள்ளது. லும்பன் மனநிலை மற்றும் சமூக குற்றங்களில் ஈடுபடுவோர்,சாதி,மத வெறியுள்ளோர் 10 முதல் 15% பேர் பாஜகவால் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
