தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் உடனடியாக கர்நாடகாவிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். சென்னை மகாபலிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பல்வேறு முக்கியக் கோரிக்கைகளையும் தொடர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.


காவிரி நீரும், இரு மாநில உறவும்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
விவசாயிகளின் வாழ்வாதாரம்: “தமிழ்நாட்டு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும்தான் நாங்கள் இதில் குரல் கொடுக்கிறோம். குருவை சாகுபடி முடிந்து தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. இதற்காக நாங்கள் கர்நாடகாவை வஞ்சிக்கவில்லை; அங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். இது இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை கிடையாது.”
கர்நாடக பயணம்: “பலமுறை நீதிமன்றத்திற்குச் சென்றும் இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. அதற்காகத்தான் முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். உங்கள் சுயநலத்திற்காகத் கோவில்களுக்குச் செல்கிறீர்கள்; அப்படியானால் தமிழ்நாட்டு மக்களுக்காகக் கர்நாடகா செல்லக்கூடாதா?”
பாதுகாப்பு உறுதி: “ஏன், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாதா? நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பு தருகிறோம்; எங்கள் ஊருக்கு வாருங்கள், உங்களுக்கான முழுப் பாதுகாப்பையும் நாங்கள் வழங்குகிறோம்.”
நதிகள் இணைப்பு மற்றும் அனைத்துக் கட்சி கூட்டம்
வட மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “நதிகளை இணைக்க வேண்டும் எனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கிறோம். முதல்வர் உடனடியாக அனைத்துட்டுக் கூட்டத்தைக் கூட்டி, அதன் மூலம் பிரதமரை நேரில் சந்தித்து இந்த நதிகள் இணைப்பு மற்றும் காவிரி நீர் விவகாரத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடரும் சட்டம்-ஒழுங்கும்
வரும் 5-ஆம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதைக் குறிப்பிட்ட பிரேமலதா, அரசின் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார்:
போதைப்பொருள் மற்றும் மதுபானம்: “சென்னையில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான்; ஆனால், டாஸ்மார்க் கடைகள் முழுமையாக மூடப்பட்டதா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.”
நையாண்டி: “வேளாண் துறை பட்ஜெட்டைத் திருப்பதியில் வைத்துச் சாமி கும்பிட்டால் வேளாண்மை செழிக்கும் என்பது அமைச்சரின் நம்பிக்கையாக உள்ளது போலிருக்கிறது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மின்வெட்டும் மின்கட்டண உயர்வும்
தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பிரச்சனை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், “மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தற்போது மின்வெட்டு அதிகரித்துத் தத்தளிக்கிறது. முதல்வரின் சொந்தப் பகுதியிலேயே மின்வெட்டைக் கண்டித்து மக்கள் ரோட்டுக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மின் கட்டணமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார். மேலும், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது போல, மழைநீரைச் சேமித்து நீர் மிகை மாநிலமாகவும் மாற்ற வேண்டும் எனத் கோரிக்கை விடுத்தார்.
முதல்வரின் கள ஆய்வும், பத்திரிகையாளர் கோரிக்கையும்
முதல்வரின் கள ஆய்வுகள் குறித்துப் பேசிய அவர், “முதல்வர் சென்னையில் ஆய்வு செய்கிறார்; ஆனால் அவர் காவிரி ஆற்றைப் பார்வையிட ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வர வேண்டும். மெட்ரோ மற்றும் காவல் துறையின் அணிவகுப்புகளைப் பார்ப்பதுடன், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் நேரில் வந்து பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்து நேரடியாகப் பேச வேண்டும் என்ற தருமபுரி மாவட்ட செய்தியாளர்களின் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் உறுதியாக வலியுறுத்துவேன்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்தார்.
