தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்படைந்திருக்கும் சூழலில், வரவிருக்கும் இடைத்தேர்தல் அரசியலின் முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் திரு. கோடீஸ்வரன். ஐந்த முனைப் போட்டி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொடர் அரசியல் நகர்வுகள் குறித்து அவர் அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்போது மாநில அரசியலில் பெரும் தீப்பொறியை ஏற்படுத்தியுள்ளது.
வெண்டிலேட்டரில் தவெக ஆட்சி; குதிரைபேரத்தின் உச்சம்!
தற்போதைய இடைத்தேர்தல் என்பது எதேச்சையாக நிகழ்ந்த ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள கோடீஸ்வரன், மாறாகச் சிறுபான்மை பலத்துடன் வெண்டிலேட்டரில் இயங்கும் ஆட்சியைத் தக்கவைப்பதற்காகத் திணிக்கப்பட்ட தேர்தல் என்று கடுமையாகச் சாடியுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் மலிவான குதிரைபேர அரசியலைச் சம்பந்தப்பட்ட கட்சி அரங்கேற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மறுபுறம், கட்சியை விட்டுச் செல்லும் உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்திலும், அப்பட்டமான குதிரைபேரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலும் அதிமுக தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒட்டுமொத்த அதிமுகவிற்கும் ஒரு மாபெரும் மானப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றார்.
“காக்கா கூடு கட்டும் தந்திரம்!”
தவெகவின் அரசியல் முறையைக் கடுமையாக விமர்சித்த அவர், “தவெகவுக்கு சொந்தமாக எந்த அடிநாதமும், அடிப்படையும் கிடையாது; காக்கா கட்டிய கூட்டுக்குள் முட்டை போட்டுவிட்டு, சொந்தக் குஞ்சுகளை வெளியே தள்ளுவதைப் போலத்தான் மற்ற கட்சிகளை உடைத்து வளரப்பார்க்கிறது” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளின் மௌனமும் ரகசியப் பேச்சுகளும்
கூட்டணிக் கட்சிகளுடன் வெளிப்படையாகப் பேசாமல், திரைக்குப் பின்னால் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகளும் திடீர் நிலைமாற்றங்களும் பொதுமக்களிடையே கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அவர் எச்சரித்தார். குறிப்பாக, பாமக போன்ற கட்சிகள் தங்களது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறி மௌனம் காப்பதும், விவகாரங்களை ‘சாப்ட் பெட்டல்’ (Soft Pedal) செய்வதும் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் இதுபோன்ற குதிரைபேர அரசியலுக்குத் துணை போவது கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்ட கோடீஸ்வரன், வரவிருக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இதுபோன்ற மலிவான அரசியல் உத்திகளுக்கு மக்கள் வழங்கும் உரிய சாட்டையடியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனத் தெரிவித்தார்.
