Homeசெய்திகள்தமிழ்நாடுநவோதயா பள்ளி விவகாரம்: இடங்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாத...

நவோதயா பள்ளி விவகாரம்: இடங்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாத கெடு!

-

- Advertisement -

மாநிலத்தில் அரசு மாறியுள்ளதால் மனநிலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் கருத்து. இரு மொழி கொள்கையில் சமரசமில்லை; மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தக் கூடாது என தமிழக அரசு வாதம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், ரூ.5,000 கோடி கல்வி நிதி பற்றாக்குறை குறித்து விவாதிக்கவும் உத்தரவு.நவோதயா பள்ளி விவகாரம்: இடங்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாத கெடு!

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

we-r-hiring

இக்கூட்டத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணியும் காரசார விவாதமும்
விசாரணையின் போது, நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பதில் உள்ள சிக்கல் என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, தமிழகத்தில் பள்ளி கட்டமைப்புகளும் கல்வித் தரமும் மிகச் சிறப்பாக உள்ளதாகவும், மாதிரி பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைக் பின்பற்றுவதால், அது தமிழகத்தின் இருமொழிக் கொள்கை சட்டத்திற்கு முரணானது என்றும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரு கொள்கையை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் வாதிடுகையில், மும்மொழிக் கொள்கையின்படி இந்தி அல்லது வேறு மொழியை மூன்றாவது மொழியாக எடுத்துக் கொள்ளலாம் என்பதே புதிய கல்விக் கொள்கை என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “எதிர் காலத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை எல்லாம் பொதுப்பட்டியலில் உள்ளது என்று கூறி ஏற்க மறுத்தால் கூட்டாட்சி தத்துவம் என்னவாகும்? நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தினால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,000 கோடிக்கும் மேலான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் அழுத்தம் கொடுத்து வருவதாக தமிழக அரசு தரப்பில் கடுமையாகக் குற்றம்சாட்டப்பட்டது.

நீதிபதிகளின் முக்கியக் கருத்துகள்
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழக அரசின் கல்வித் தரம் மிகவும் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

டெல்லியில் உள்ள கல்வியை விடச் சென்னையில் உள்ள கல்வியின் தரம் தாழ்ந்தது அல்ல. அதேசமயம், நவோதயா பள்ளிகளின் கொள்கையை உங்கள் மாநிலத்தின் கொள்கைக்கேற்ப வடிவமைக்கலாமே?” என யோசனை தெரிவித்தனர்.

மேலும், “தமிழகத்தில் புதிய அரசு மாறியுள்ளது, அதனால் அதன் மனநிலையிலும் சில மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்போம் என்றில்லாமல், இரு தரப்பும் பரஸ்பரம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்:

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்காக நிலங்களை அடையாளம் காண ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாநில அரசு செயல்படுத்த வேண்டும்; இதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

நவோதயா பள்ளிகளை நிறுவுவதில் உள்ள முரண்பாடுகளைக் களைய, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்மட்ட அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கல்வி நிதி ரூ.5,000 கோடி குறித்தும் விவாதித்துத் தீர்வு காண வேண்டும்.

வழக்கின் விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த விசாரணையின் போது, தமிழகத்தில் அரசு மாறியுள்ளதால் அரசின் மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என நீதிபதிகள் வலியுறுத்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

பெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா?: யு.பி.ஐ கட்டண உயர்வுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

MUST READ