தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA-PG) நுழைவுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளுக்கு தகுதியுள்ள பட்டதாரிகள் வரும் மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக இந்த நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள், அதன் இணைப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், மேலும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் (TANCET) தேர்வை எழுத வேண்டும்.
அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். மற்றும் எம்.பிளான். போன்ற முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விரும்புவோர் சீட்டா (CEETA-PG) தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத் தேர்வுச் செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மே 9 ஆம் தேதி டான்செட் (TANCET) தேர்வும், மே 10 ஆம் தேதி சீட்டா (CEETA-PG) தேர்வும் நடைபெறவுள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய 15 நகரங்களில் இந்தத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.
விண்ணப்ப கட்டணம் சமூகப் பிரிவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ / எம்.சி.ஏ. (TANCET): எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாய்; இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய்.
எம்.இ. / எம்.டெக் (CEETA-PG): எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 900 ரூபாய்; இதர பிரிவினருக்கு 1,800 ரூபாய். (இந்தக் கட்டணத்திலேயே கலந்தாய்வு கட்டணமும் அடங்கும்).
அனைத்துக் கட்டணங்களுடனும் கூடுதலாக 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
மாணவர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே இணையதளத்தில் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே அல்லது ஜூன் மாதங்களில் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி? – அன்புமணி
