முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்
மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியுமான நரேஷ் குப்தா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
முன்னாள் தமிழக தேர்தல் தலைமை ஆணையரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமாக பணியாற்றியவர் நரேஷ் குப்தா. மகன் மனிஷ் குப்தா மற்றும் மருமகள் ஜபல்பூர் உடன் சென்னை அண்ணாநகர் ஆபீஸர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்த நரேஷ்குப்தா, இதய நோய் காரணமாக கடந்த 5-ஆம் தேதி கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர், நேற்று மாலை 4:20 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நரேஷ் குப்தாவின் இறுதி சடங்கு வருகின்ற 12-ஆம் தேதி புதன்கிழமை அன்று அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் குடும்ப வழக்கத்தின்படி நடைபெறும் எனவும், அவரது உடல் எங்கு தகனம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து புதன்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் குப்தாவின் மகன் தெரிவித்தார். மேலும் இவரது மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.