Homeசெய்திகள்தமிழ்நாடுகமல்ஹாசன் படத்தின் ‘சண்டியர்’ தலைப்பை ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் – இல்லையெனில் தமிழகம் முழுவதும்...

கமல்ஹாசன் படத்தின் ‘சண்டியர்’ தலைப்பை ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் – இல்லையெனில் தமிழகம் முழுவதும் தொடர் முற்றுகைப் போராட்டம்! புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு வாரத்திற்குள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் எனக் காலக்கெடு விதித்துள்ளார்.கமல்ஹாசன் படத்தின் ‘சண்டியர்’ தலைப்பை ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் – இல்லையெனில் தமிழகம் முழுவதும் தொடர் முற்றுகைப் போராட்டம்! புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

இல்லையெனில், தமிழ்நாட்டில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

we-r-hiring

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, ‘சண்டியர்’ படத்தின் தலைப்பு தொடர்பாகத் தனது எதிர்ப்பையும் அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

2003-ஆம் ஆண்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தோம்

கடந்த 2003-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிக்கத் திட்டமிட்டிருந்த படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டபோதே புதிய தமிழகம் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக கிருஷ்ணசாமி கூறினார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு அளித்ததாகவும், அவர் கமல்ஹாசனை அழைத்து அறிவுரை வழங்கியதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தலைப்பு கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

2004-ஆம் ஆண்டு தமிழக அரசால் அந்தப் பெயர் தடை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்திருக்கக் கூடாது என்றும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு மே 29-ஆம் தேதியும் புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் மனு – தலைப்புக்கு எதிர்ப்பு

கமல்ஹாசன் தற்போது ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்க முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு அளித்துள்ளதாக கிருஷ்ணசாமி கூறினார். மனுவைப் பெற்றுக்கொண்ட சங்கத்தினர், இதுகுறித்து குழுவைக் கூட்டி ஆலோசிப்பதாகத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் தலைப்புக்கும் தங்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார். இளைஞர்கள் சினிமாவின் தாக்கத்திற்கு அதிகமாக உள்ளாகி வருவதால், திரைப்படங்களின் தலைப்புகளும் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அரிவாள் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக் கூடாது

திரைப்படங்கள் மூன்று மணி நேரப் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், ஆயுதக் கலாச்சாரம், அரிவாள் கலாச்சாரம், ஆபாசம் மற்றும் சாதிய உணர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

திரைப்படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, பழிக்குப் பழி வாங்குதல், ரத்தம் மற்றும் ஆயுதங்களை முன்னிறுத்தும் காட்சிகள் இளைஞர்களிடையே வன்முறை மனப்பான்மையைத் தூண்டக்கூடும் என்றும் தெரிவித்தார்.

‘திருப்பாச்சி’ உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்கள் சில பகுதிகளில் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். திரைப்படங்களில் அரிவாள் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் விளக்கினார்.

கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிக்கை

‘சண்டியர்’ படத்தின் தலைப்பு மற்றும் அதில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கருத்துகள் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் இருப்பதாகக் குற்றம்சாட்டிய கிருஷ்ணசாமி, இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய தணிக்கைக் குழு கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டிய அவர், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத் தலைப்பே இறுதியானது எனக் கருத முடியாது என்று கூறினார்.

ஒரு வாரம் கெடு – தமிழகம் முழுவதும் போராட்டம்

கமல்ஹாசனுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகத் தெரிவித்த கிருஷ்ணசாமி, அதற்குள் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டுப் படப்பிடிப்பைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவ்வாறு தலைப்பை மாற்றாவிட்டால், தமிழ்நாட்டில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் புதிய தமிழகம் கட்சி சார்பில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

மேலும், சினிமா, சமூக வலைதளம், மதுபழக்கம் ஆகியவை இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘தேவர் மகன்’ திரைப்படம் வெளியான பிறகு தென் தமிழகத்தில் கலவரங்கள் நடைபெற்றதாகவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

தனிப்பட்ட விரோதம் இல்லை என விளக்கம்

கமல்ஹாசன் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்த கிருஷ்ணசாமி, படத்தின் தலைப்பால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கருத்தில் கொண்டே எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார். ‘பாகுபலி’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சொல் நீக்கப்பட்டதையும், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட குறியீடு மாற்றப்பட்டதையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

படக்குழுவினருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே தலைப்பை மாற்றக் கோருவதாகவும், எதிர்ப்பு எழும் என்று தெரிந்தும் ஏன் இந்தத் தலைப்பில் படத்தை எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு வாரத்திற்குள் தலைப்பை மாற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மீண்டும் எச்சரித்தார்.

சண்டியர் என்ற பெயரில் படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும் – புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

MUST READ