மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவத்தின் முக்கிய தீர்த்தவாரி நாட்களில் பக்தர்கள் புனித நீராடும் வகையில், காவிரியில் தினமும் 500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
துலாக்கட்டத்தில் போதிய தண்ணீர் இல்லை எனப் புகார்

மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான கே.ராஜேந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மயிலாடுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவத்தில் பங்கேற்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் முக்கிய தீர்த்தவாரி நாட்களில் துலாக்கட்டத்தில் போதிய தண்ணீர் இல்லாததால், ஆழ்துளைக் கிணற்று நீரையும், கடைசி நேரத்தில் கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரையும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனம் நீராட முடியாத நிலை
நடப்பாண்டு ஐப்பசி துலா உற்சவம் நவம்பர் 6-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி கடைமுகத் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதையொட்டி கல்லணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும், துலாக்கட்டத்தில் போதிய அளவு நீர் இல்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக தருமபுரம் ஆதீனகர்த்தரே காவிரியில் புனித நீராட முடியாமல், பாத்திரத்தில் கொண்டுவரப்பட்ட தண்ணீரில் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17 வரை தினமும் 500 கனஅடி நீர் திறக்கக் கோரிக்கை
தற்போதைய விழாக் காலத்தில் நவம்பர் 17-ஆம் தேதி வரை தினமும் சுமார் 500 கனஅடி தண்ணீரைக் காவிரியில் திறந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அதேநேரத்தில், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் தொழில்நுட்ப ரீதியாக நீர் திறப்பைத் திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீர்வளத் துறை, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஆதீனங்கள் உள்ளிட்டோர் அடங்கிய நிரந்தரக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி விழாவுக்கு முன்னதாகக் கூடி, காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவதற்குத் தேவையான நீர் மேலாண்மைத் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஐப்பசி துலா உற்சவத்தின் முக்கிய தீர்த்தவாரியை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, பக்தர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
