தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தைச் சீரழித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு
தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், தவெக ஆட்சியின் கடந்த 77 நாட்களில் மாநிலத்தில் 4 காவல் நிலைய மரணங்கள், 80-க்கும் மேற்பட்ட படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் குற்றஞ்சாட்டினார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய இந்த அரசு உடனடியாக இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நில முறைகேடு மற்றும் அரசாணை விவகாரம்
பழனி கோயில் நிலப் பத்திரப்பதிவில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முறைகேடாகப் பட்டா போடப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், கரூர் விவகாரத்தில் முறையான சட்ட விதிகளையும் அமைச்சரவை ஒப்புதலையும் பின்பற்றாமல் அவசரகதியில் அரசாணை பிறப்பித்ததால், அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

மேகதாது விவகாரமும் எதிர்கால அரசியலும்
காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிப் கவலைப்படாமல் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசிடம் தண்ணீரைப் பெறத் திராணியின்றி, மத்திய அரசு மீது தவெக அரசு வீண் பழிபோடுவதாகத் தெரிவித்தார். வரும் தேர்தலில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு, தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: மத்திய அரசின் உயரிய விருது வழங்கி கௌரவம்!
