Homeசெய்திகள்தமிழ்நாடுகட்டாய மருத்துவ சேவை விதிகளில் மாற்றம் வேண்டும்! 2021, 2022 கல்வியாண்டு மருத்துவர்களுக்கு நீதி வழங்கக் கோரிக்கை...

கட்டாய மருத்துவ சேவை விதிகளில் மாற்றம் வேண்டும்! 2021, 2022 கல்வியாண்டு மருத்துவர்களுக்கு நீதி வழங்கக் கோரிக்கை – சுகாதாரத்துறை சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தல்

-

- Advertisement -

மருத்துவர்களின் சமூக வலைதளப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும்,கட்டாய மருத்துவ சேவை விதிகளில் மாற்றம் வேண்டும்! 2021, 2022 கல்வியாண்டு மருத்துவர்களுக்கு நீதி வழங்கக் கோரிக்கை – சுகாதாரத்துறை சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தல்

2021 மற்றும் 2022 கல்வியாண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பை முடித்த மருத்துவர்களின் கட்டாய மருத்துவ சேவை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

we-r-hiring

இது தொடர்பாகச் சங்கத்தின் செயலாளர் சாந்தி மற்றும் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:

கட்டாய மருத்துவ சேவை விதிகளில் குழப்பம்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளை முடிக்கும் மருத்துவர்கள், அரசு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டாய மருத்துவ சேவை ஆற்ற வேண்டும்.

அவ்வாறு பணியாற்றத் தவறினால், ஒப்பந்த விதிகளின்படி ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

கட்டாய மருத்துவ சேவை அல்லது அதற்குப் பதிலான தொகையைச் செலுத்திய பின்னரே கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற நடைமுறை இருப்பதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் போதிய காலிப் பணியிடங்கள் இல்லாத காரணத்தால், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அனைவருக்கும் கட்டாய மருத்துவ சேவைப் பணிகளை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் தேவை மற்றும் பணியிடங்களின் நிலவரத்தைப் பொறுத்து கட்டாய மருத்துவ சேவைக் காலத்தை ஓராண்டாகவோ அல்லது இரண்டாண்டுகளாகவோ மாற்றிக்கொள்ளும் வகையில் அரசாணைகள் வெளியிடப்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு ஓராண்டு கட்டாய மருத்துவ சேவை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

2021, 2022 கல்வியாண்டு மருத்துவர்கள் பாதிப்பு

2021 மற்றும் 2022ஆம் கல்வியாண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த சிலர், நிர்வாகக் காரணங்களால் 2025ஆம் ஆண்டில் படிப்பை முடித்துள்ளனர்.

இவர்களுக்குக் கட்டாய மருத்துவ சேவைக்கான பணியிடங்களை உரிய முறையில் ஒதுக்குவதிலும், பணியை முடித்தவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களை வழங்குவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவர்கள் தாங்கள் படித்த சிறப்புப் பிரிவுக்கு ஏற்ற பணிகளை எதிர்பார்க்கும் நிலையில், பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் படித்தவர்களுக்கும் பொதுவான பணிகள் வழங்கப்படுவதாகச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், மருத்துவர்களின் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப பணியிடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக வழக்குத் தொடர்ந்த சில மருத்துவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டதாகவும், மற்றவர்கள் பணியும் கல்விச் சான்றிதழும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.

921 மருத்துவர்களுக்கு விலக்கு அளித்தது ஏற்க முடியாது

கட்டாய மருத்துவ சேவை தொடர்பான விதிகளிலிருந்து 921 மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் பணியாற்ற வேண்டிய அவசியமோ அதற்குப் பதிலாகத் தொகை செலுத்த வேண்டிய கட்டாயமோ இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல எனக் கூறியுள்ள சங்கம், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விதிகளின்படி கட்டாய மருத்துவ சேவையை நிறைவு செய்த 2021 மற்றும் 2022ஆம் கல்வியாண்டு மருத்துவர்களுக்குக் கல்விச் சான்றிதழ்களை வழங்கி, அவர்களைப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபோது, மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், எதிர்காலத்தில் பிரச்சினையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாகச் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஆனால், சுகாதாரத்துறைச் செயலாளரைச் சந்தித்தபோது, மருத்துவர்கள் விரும்பினால் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சர் தரப்பில் ஓராண்டு கட்டாய மருத்துவ சேவையை முடித்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், செயலாளர் தரப்பில் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் கோரிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கப்படுவதாகவும் சங்கம் கூறியுள்ளது.

இதனால், ஒரே விவகாரத்தில் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் முரண்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர்களின் மகப்பேறு காலத்தைக் கணக்கிட வேண்டும்

கட்டாய மருத்துவ சேவை ஒப்பந்தத்தில் உள்ள பெண் மருத்துவர்கள், சேவைக் காலத்தின்போது மகப்பேறு அடைந்தால், அவர்களின் மகப்பேறு காலத்தையும் கட்டாய மருத்துவ சேவைக் காலத்தில் கணக்கிட வேண்டும் எனச் சங்கம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், பெண் மருத்துவர்களுக்கு அந்தச் சலுகை முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், 2021 மற்றும் 2022ஆம் கல்வியாண்டுகளில் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஓராண்டு கட்டாய மருத்துவ சேவையை நிறைவு செய்திருந்தால், அவர்களை விடுவித்து கல்விச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும், 2023ஆம் ஆண்டில் கட்டாய மருத்துவ சேவை ஒப்பந்தம் இல்லாதவர்களுக்கும் உரிய பணி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு மருத்துவப் பணிகளுடன், மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருப்பதால், அதை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

சமூக வலைதளக் கருத்துப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்

சுகாதாரத்துறையில் பணியாற்றுவோர் அரசுக்கு எதிராகவோ அல்லது பிற அரசுகளுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடக் கூடாது என்றும், அரசின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசை விமர்சிக்கும் கருத்துகளைப் பதிவிடுவதைத் தடுக்கும் இந்த நடவடிக்கை, ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகச் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவத்துறையில் ஏதேனும் புகார்கள் இருந்தால், அவை உரிய அதிகாரிகள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

புகார்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுகள் இருந்தால், அவர்களிடம் எவ்வாறு புகார் அளிப்பது என்ற கேள்வியும் எழுவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிடுவதைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கட்டாய மருத்துவ சேவை தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கையாலாகாத மோசமான அரசு தவெக அரசு! – திண்டுக்கல் சீனிவாசன் கடும் விமர்சனம்

MUST READ