தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. இதற்கு சான்றாக பிரபாகரன் உடல் என ஒன்றும் காட்டப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், “பிரபாகரன் குடும்பத்தினர் தன்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். நலமுடன் தான் இருக்கிறேன். விரைவில் அவர் வெளியில் வருவார். இந்த தகவலை பிரபாகரன் அனுமதியுடன் அறிவிக்கிறேன்” என்றார்.
இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.
தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
