செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்குத் தொடரப்பட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளதாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் இளைஞர்கள் மிதிவண்டிப் பேரணி
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிக்க வேண்டும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும், நிதிசார் பொதுக் கல்வியை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி இளைஞர்கள் மிதிவண்டிப் பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வியைச் சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் உருவாக்கி, செயற்பாட்டு மனிதநேயத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேரணி இன்று விழுப்புரம் வந்தடைந்தபோது, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இளைஞர்களை வரவேற்று, சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
கல்விக் கொள்கைக்கு எதிரான பேரணிக்கு ஆதரவு
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கவும் வலியுறுத்தி நடைபெறும் இந்தப் பேரணி வெற்றி பெற வேண்டும் என்றார்.
இந்தக் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செம்மண் குவாரி வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு
தொடர்ந்து, செம்மண் குவாரி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த பொன்முடி, அரசியல் ரீதியாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மூல வழக்கில் தானும் தனது மகன் கௌதம சிகாமணியும் விடுவிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்குத் தொடர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டதாகத் தான் கருதுவதாகக் கூறினார்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக நம்புவதாகவும், நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும் பொன்முடி தெரிவித்தார்.
துரோகிகளின் சுயநலத்தால் அதிமுகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார்கள்! – பழ. கருப்பையா ஆவேசப் பேட்டி!
