Homeசெய்திகள்தமிழ்நாடுவாரத்தில் 5 நாட்களும் விளையாட்டுப் பாடவேளை! டெட் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு நேரடிப் பயிற்சி –...

வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டுப் பாடவேளை! டெட் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு நேரடிப் பயிற்சி – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

-

- Advertisement -

பள்ளிகளுக்குப் புதிய கால அட்டவணை வெளியீடு – கணிதம், அறிவியலுக்கு கூடுதல் பாடவேளை; விளையாட்டில் சாதி, மதப் பாகுபாடு கூடாது என அறிவுறுத்தல்!வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டுப் பாடவேளை! டெட் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு நேரடிப் பயிற்சி – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘பள்ளிப்பார்வை 3.0’ செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர், பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையையும் வெளியிட்டார்.

we-r-hiring

மேலும், உடற்கல்வி வகுப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு நேரடிப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டுப் பாடவேளை

பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வாரத்தில் ஐந்து நாட்களும் விளையாட்டுப் பாடவேளைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வாரத்தில் மூன்று உடற்கல்விப் பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பாடவேளைகளையும் தேவைக்கேற்ப உடற்கல்வி மற்றும் விளையாட்டுச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறினார்.

பள்ளிகளில் உள்ள பி.இ.டி. பாடவேளைகளை முழுமையாகப் பயன்படுத்தி, மாணவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சாதி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் விளையாட்டு

மாணவர்களிடையே சாதி, மதம், நிறம் உள்ளிட்ட எந்தவிதமான பாகுபாடுகளும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார். உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பாடவேளைகளின்போது அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், எந்தவொரு மாணவரையும் விளையாட்டில் பங்கேற்பதிலிருந்து ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பள்ளிகளில் விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மாணவர்களிடையே ஒற்றுமை, குழு மனப்பான்மை மற்றும் சமத்துவ உணர்வை வளர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும்

அமைச்சர் வெளியிட்ட திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை செயல்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பாடவேளை 90 நிமிடங்களாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பாடவேளை 45 நிமிடங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், பாடவேளைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் தலா நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கலை, கைவினை மற்றும் சமூக மனவெழுச்சிக் கற்றலுக்கு முக்கியத்துவம்

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இசை, கலை, கைவினை மற்றும் சமூக மனவெழுச்சிக் கற்றல் உள்ளிட்ட வகுப்புகளுக்கு வாரத்தில் இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடவேளையும் 45 நிமிடங்களாக இருக்கும். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய செயல்பாடுகளுக்காக வாரத்தில் ஒரு பாடவேளை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நூலகம், விழுமியக் கல்வி, பள்ளி இணைச் செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையவழிக் கல்விக் கருவிகளுக்கான TN SPARK ஆகியவற்றுக்கும் திருத்தப்பட்ட கால அட்டவணையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

11, 12ஆம் வகுப்புகளுக்கும் உடற்கல்வி வகுப்புகள்

பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு உடற்கல்வி வகுப்புகளும், இரண்டு கல்வி இணைச் செயல்பாட்டு வகுப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சிகளுக்கான பாடவேளைகளும் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் உடல் ஆரோக்கியம், திறன் மேம்பாடு மற்றும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு நேரடிப் பயிற்சி

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது, இந்த ஆண்டு நடைபெற்றது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு என்றும், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு அதிலிருந்து வேறுபட்டது என்றும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக அமைச்சர் விளக்கமளித்தார்.

பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளுக்கு இடையே ஆசிரியர்கள் தேர்வு எழுதியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்ச்சி பெறாததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

ஏற்கெனவே எஸ்.சி.இ.ஆர்.டி. மூலம் இணையவழிப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஆசிரியர்களுக்கு நேரடியாகப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு முழுநேர இயக்குநர் எப்போது?

பள்ளிக்கல்வித்துறைக்கு முழுநேர இயக்குநர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார். பள்ளிக்கல்வித்துறை தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தலைமையுடன் ஆலோசனை நடத்தி விரைவில் முழுநேர இயக்குநர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

மூன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்குப் பயிற்சி

மூன்றாம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழிகாட்டிக் கையேடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கான புத்தகங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய கால அட்டவணை, விளையாட்டுப் பாடவேளைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், ஆசிரியர்களுக்கான நேரடிப் பயிற்சி மற்றும் சமத்துவ அடிப்படையிலான விளையாட்டு வாய்ப்புகள் ஆகியவை பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகளாக அமைந்துள்ளன.

எல் நினோ மழை அபாயம், மாநகராட்சி மக்கள் நலப் பணிகள் முடக்கம்: தவெக அரசைக் கண்டித்து அக்.15-ல் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

MUST READ