தமிழ்நாட்டில் 2026-2027 கல்வியாண்டிற்கான மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலைச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியக அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு ஒதுக்கீட்டுக்கு 35,926 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 26,956 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கலந்தாய்வு விவரங்கள்:
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நேரில் (Offline) நடைபெறும்.
இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 9,999 இடங்களும் (கடந்த ஆண்டைக் காட்டிலும் 850 இடங்கள் அதிகம்), பல் மருத்துவப் படிப்பிற்கு (BDS) 2,000 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் 537 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 104 இடங்களும் என மொத்தம் 641 மாணவர்கள் மருத்துவம் பயில உள்ளனர்.
நீட் தேர்வு சாதனையாளர்கள்:
மாநில அளவில் முதலிடம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இரண்டாமிடம்: ஸ்ரீனிகா பி (புதுக்கோட்டை) – 700 மதிப்பெண்கள்.
மூன்றாமிடம்: சுடர் (விருதுநகர்) – 696 மதிப்பெண்கள்.
7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு தரவரிசை:
தினேஷ் (நாகப்பட்டினம்) – 599 மதிப்பெண்கள்
தரணீஷ் (சேலம்) – 595 மதிப்பெண்கள்
ராஜேஷ் (புதுக்கோட்டை) – 595 மதிப்பெண்கள்
பாரா மெடிக்கல் சிறப்பிடம்:
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான (Paramedical) பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசையில், முதல் மூன்று இடங்களையும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகளே (ஹேமலதா, மெர்லின், கீர்த்தனா) தட்டிச் சென்றுள்ளனர்.
கடும் எச்சரிக்கை மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிப்பு:
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், போலிச் சான்றிதழ்கள் சமர்ப்பித்த 5 மாணவர்களின் விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, 170 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மாணவர் ஒருவர் 552 மதிப்பெண்கள் எனத் திருத்தி விண்ணப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற முறைகேடுகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது உரிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு குறித்த அரசின் நிலைப்பாடு:
நீட் தேர்வு தமிழ்நாடு அரசின் கொள்கைக்கும், மாநில உரிமைகளுக்கும், ஏழை எளிய மாணவர்களுக்கும் எதிரானது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் அல்லது மாநில அரசுகள் இயற்றும் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் நிலைப்பாட்டை மீண்டும் சுட்டிக்காட்டினார். மேலும், கலந்தாய்வில் வெற்றி பெறாத மாணவர்கள் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திராவிடர் கழகத் தொண்டர்கள் என்ன தீவிரவாதிகளா? – சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி காரசாரம்!
