தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குகள் தொடரப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினரை இலக்காகக் கொண்டு காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐந்து மாத ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை இந்தியாவிலேயே மோசமாக இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில் இருந்ததாகவும், மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறிய அவர், பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற கவலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தார்.
பழனி கோவில் விவகாரம் குறித்து விசாரணை கோரிக்கை!
பழனி கோவில் விவகாரத்தில் ரூ.100 கோடி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஆர்.எஸ்.பாரதி எழுப்பினார். இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளி உயிருடன் சென்றுவிட்டு உயிரிழந்த நிலையில் திரும்பியதாகக் கூறிய அவர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக காவல்துறை அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அன்பில் மகேஷ் கைது முறையாக நடைபெற்றதா?
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட விதம் குறித்தும் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.
ஜாமீன் தொடர்பான சட்ட நடவடிக்கைக்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞரைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, அவரது இல்லத்திற்குச் சென்று காவல்துறையினர் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய கைது நடவடிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சோதனைகள், கைதுகளுக்கு திமுக அஞ்சாது!
திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் நடத்தப்படும் சோதனைகள், கைதுகள் ஆகியவை அரசியல் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கைகள் என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.
1976-ஆம் ஆண்டு முதல் திமுக பல்வேறு வழக்குகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நடவடிக்கைகளுக்கு திமுகவினர் அஞ்சப்போவதில்லை என்றார்.
மேலும், திமுக மகளிர் அணி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இடைத்தேர்தலைக் குறிவைத்தே நடவடிக்கைகளா?
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில், திமுகவின் முக்கிய நிர்வாகிகளான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்களைக் குறிவைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அதுவரை எத்தனை வழக்குகள் தொடரப்பட்டாலும் திமுக எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
கலையரசன் கைது; தவறான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
கல்வியாளர் மற்றும் பேராசிரியர் கலையரசன் தவறான சமூக ஊடகப் பதிவுக்காகக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார்.
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் குறித்து தவறான பதிவுகளை வெளியிடுவதாகவும், இதுதொடர்பாகப் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, காவல்துறையின் செயல்பாடு, எதிர்க்கட்சியினர் மீதான வழக்குகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆர்.எஸ்.பாரதி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவைப் பழிவாங்கும் தொனியில் அரசு செயல்படுகிறது – சேகர்பாபு குற்றச்சாட்டு!
