மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் பொருளாதார நடவடிக்கைகளோ எதுவுமின்றி, வெறும் பெயரளவிலான வெற்றி அறிக்கையாகவே தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்தாவது,
தேர்தல் வாக்குறுதிகளில் பச்சைக் துரோகம்!
தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் தவெக அரசு தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது என்று சீமான் சாடியுள்ளார். தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான (சிலிண்டர்) பணத்தைத் திரும்பச் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் பெண்களுக்கான இலவசப் போக்குவரத்து போன்ற எந்தவொரு சிறப்பான அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வெறும் 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றார்.

அதிமுக்கிய துறைகளின் நிதி ஒதுக்கீடு வெட்டு!
முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது பள்ளிக்கல்வித்துறைக்கு 2,240 கோடி ரூபாயும், உயர்கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாயும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். இதனுடன், தொழில் வளர்ச்சித்துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறித்துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும், மின்துறைக்கு 5,350 கோடி ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கல்வி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளின் நிதியை வெட்டியிருப்பது தமிழ்நாட்டைப் பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்லும் என்று எச்சரித்தார்.

உழவர்கள் மற்றும் சமூகநீதி புறக்கணிப்பு!
சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாகக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடாதது மோசடித்தனம் என்றார். பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாததுடன், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி நிற்கும் நிலையில், அதைப் பற்றிப் பேசாமல் மௌனம் காப்பது உழவர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் எனக் குற்றம் சாட்டினார்.
நிதியமைச்சர் வாசிப்பில் மட்டுமல்ல, பட்ஜெட்டிலும் தடுமாற்றம்!
பதிவுத்துறை சீர்திருத்தங்கள் மூலம் கூடுதலாக 15,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று அரசு கூறுவது உண்மையானால், கல்வி போன்ற அதிமுக்கிய துறைகளின் நிதியைக் குறைத்தது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை அதிகரிக்கத் தரத்தை உயர்த்தாமல், பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம் என்றார். மூன்று மாதங்களைக்கூட நிறைவு செய்யாத தவெக அரசு ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளதே இதன் நிதி நிர்வாகத்தின் லட்சணம் என்றும், 2031-க்குள் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்ற இலக்கை எப்படி அடையப் போகிறோம் என்பதற்கான வழிமுறைகள் பட்ஜெட்டில் இல்லை என்றும் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
