தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமசாமி என்ற முரளி தலைமையில் செயற்குழு கூட்டம் ஜனவரி மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடத்தப்படும் என்றும் அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் 100 ரூபாய் செலுத்தி உறுப்பினர்கள் இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும், பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை மார்ச் 2 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விண்ணப்பங்களைத் திரும்பப் பெறவும், அன்றைய தினமே மாலை 6 மணியளவில் இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மார்ச் 26 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெறும் என்றும் அதன் பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
