“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, சொந்த வீட்டின் பணத்தையும் தங்கத்தையும் திருடிய பேத்திக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும் பொருட்டு, அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துச் சிறைத் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர் சீனாவைச் சேர்ந்த முதிய தம்பதியினர்.
தொடர் திருட்டு & தாத்தா-பாட்டியின் அதிரடி!
சீனாவைச் சேர்ந்த வயதான தம்பதி வீட்டின் பாதுகாப்பில் வைத்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் இந்திய மதிப்பில் சுமார் ₹3 லட்சம் பணத்தைச் சொந்த பேத்தியான ‘சென்’ என்பவர் திருடியது தெரியவந்துள்ளது. கடந்த காலங்களிலும் இதேபோன்று பலமுறை சொந்த வீட்டிலேயே திருட்டுச் சம்பவங்களில் சென் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பேத்தியின் இந்தத் தவறான பழக்கத்தைத் பலமுறை கண்டித்தும் அவர் திருந்தாததால், இறுதியாக அவருக்குத் தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்த தாத்தா-பாட்டி, சொந்த பேத்தி என்றும் பாராமல் அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

“குடும்ப விஷயம்” என்ற பேத்தி: மசியாத முதியவர்கள்!
போலீஸாரால் கைது செய்யப்பட்ட பேத்தி சென், “இது எங்களது குடும்பத்திற்குள் இருக்கும் உள்விவகாரம். என் தாத்தா-பாட்டி என்னைக் கண்டித்தாலும் நிச்சயம் மன்னித்து விடுவார்கள்; வழக்கை வாபஸ் பெறுவார்கள்” என அலட்சியமாகக் கூறியுள்ளார். ஆனால், பேத்தியின் இந்த எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில், பேத்திக்கு ஒழுக்கமும் சட்டத்தின் பயமும் வர வேண்டும் என்பதில் தாத்தா-பாட்டி உறுதியாக நின்றனர். புகாரையோ வழக்கையோ திரும்பப் பெற அவர்கள் மறுத்துவிட்டனர்.
6 மாத சிறைத்தண்டனை!
இந்த வழக்கினை விசாரித்த சீன நீதிமன்றம், சொந்த வீட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காகச் சென்னுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குடும்பப் பாசத்தை விட ஒழுக்கமும் நேர்மையும் தான் முக்கியம் என்பதை உணர்த்தி, சொந்த பேத்தியையே சிறைக்கு அனுப்பிய இந்தத் தாத்தா-பாட்டியின் அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையையும், சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
