மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற மிகப்பெரிய குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன் குப்பைகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டுள்ளன.


இந்தக் குப்பைக் கிடங்கு, அதைச் சுற்றி வசிக்கும் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எனவே குப்பைக் கிடங்கை மூடி, குப்பைகளை வேறு இடத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் டார் எஸ் சலாம் குப்பைக் கிடங்கு மூடப்பட இருந்தது.
இந்தச் சூழலில் கொனாக்ரியில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழையால், கிடங்கில் இருந்த குப்பை மலை ஒன்று அதிகாலை 3 மணிக்குச் சரிந்து, குடியிருப்பு பகுதி மீது விழுந்தது. அப்போது வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் உயிரோடு புதைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
