மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றத்தைத் தணிக்க, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான புரிந்தணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. ஆனால், அந்த போர்நிறுத்தக் காலத்தை ஈரான் தனது ராணுவ பலத்தைப் பெருக்கவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அடுத்தகட்டப் போருக்குத் தயாராவதற்குமே பயன்படுத்திக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ராணுவத் தயாரிப்புகள் தீவிரம்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான மோதலுக்கு ஈரான் தன்னை முழுமையாகத் தயார்படுத்தி வருவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரான் புரட்சிகரப் படை (IRGC) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த போர்நிறுத்தக் காலத்தை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டோம். எங்கள் ராணுவத் திறன்களை மேம்படுத்தி, ஏவுகணை உற்பத்தியை விரைவுபடுத்தி, அதன் துல்லியத்தன்மையை அதிகரித்துள்ளோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
புதிய ஆபத்துகள் – குவைத் மீது தாக்குதல் அச்சம்:
ஈரானின் இந்தத் தயாரிப்புகள், பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளன:
முன்கூட்டியே தாக்குதல் (Pre-emptive strikes): எதிரி நாடுகளுக்கு எதிராக முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் திட்டங்களை ஈரான் வகுத்துள்ளது.
குவைத் மீது குறி: பாரசீக வளைகுடாவில் உள்ள இணையக் கேபிள்களைச் சேதப்படுத்துவது முதல், குவைத் நாட்டிற்குள் தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்வது வரை ஈரான் பல்வேறு விருப்பங்களைத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், குவைத் தீவு ஒன்றில் ஈரான் புரட்சிகரப் படையைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயன்றதை குவைத் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்திய சம்பவம், இந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
படைக்கட்டமைப்பு மாற்றம்: நாட்டின் ராணுவ அமைப்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள ஈரான், அனுபவம் வாய்ந்த போர் வீரர்களை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது.
மறைமுகப் போரும் உளவுத் தகவல்களும்:
ஈரான் தனது நட்பு அமைப்புகளான லெபனான், ஏமன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள போராளி குழுக்களுடன் இணைந்து தாக்குதல் வியூகங்களை வகுத்துள்ளது. மேலும், ஏமன் போராளிகளுக்கு ஏவுகணை மற்றும் உளவுத் தகவல்களை வழங்கி, சவூதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்குவதற்கு உதவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், மேற்காசியாவில் அமைதி திரும்புவதற்குப் பதிலாக, ஈரான் தனது ராணுவ ஆக்ரோஷத்தை அதிகரித்திருப்பது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மீண்டும் ஒரு பெரும் போர்ச் சூழலுக்குத் தள்ளியுள்ளது.
