
இலங்கை குடிநீர் வழங்கல் துறை இணை அமைச்சர் சனத் நிஷாந்த(48) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சனத் நிஷாந்த கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் புத்தலம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் குடிநீர் வழங்கல் துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விரைவு சாலையில், கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். இவர் சென்றுகொண்டிருந்த கார் கொள்கலன் டிரக் வண்டியுடன் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவருடன் சென்ற அதிகாரி ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கந்தானை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


