அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியைச் சேகரித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை சாட்ஸ்வொர்த் பகுதியில் நடந்துள்ளது.


விபத்தில் சிக்கிய NBC செய்தி ஹெலிகாப்டர்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள சாட்ஸ்வொர்த் பகுதியில், NBC Los Angeles-க்கு சொந்தமான செய்தி ஹெலிகாப்டர் மாலை 7 மணியளவில் விபத்துக்குள்ளானது. 9100 Block of North Mason Avenue பகுதியில் உள்ள வணிகக் கட்டிடங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் விழுந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பேருந்து விபத்தை செய்தியாக்க சென்றபோது சோகம்
அப்பகுதியில் முன்னதாக SUV வாகனமும் நகரப் பேருந்தும் மோதிய விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், பல செய்தி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் அந்த விபத்து குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தன.
அப்போது NBC-யின் செய்தி ஹெலிகாப்டருடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக NBC Los Angeles தெரிவித்தது. சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது.
3 பேர் உயிரிழப்பு; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒருவர் தரையில் இருந்தவர் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்ததுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கின் சில பகுதிகளும் தீயால் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக NBC Los Angeles நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோதே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
