ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பிரபல தொழில்நுட்ப நிபுணர் சுகுமார் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
40 லட்சம் மணி நேர போர் தரவுகள்: உக்ரைனின் ஏஐ வியூகம்
ரஷ்யாவின் பிரம்மாண்ட ராணுவ பலத்திற்கு எதிராக உக்ரைன் தனது நேரடிப் போர் அனுபவத் தரவுகளைச் (Live Combat Data) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் திறம்படப் பயன்படுத்தி வருகிறது. சுமார் 40 லட்சம் மணி நேர நேரடிப் போர் தரவுகளை நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுடன் உக்ரைன் பகிர்ந்துகொண்டுள்ளது. இதற்குப் பதிலாக அதிநவீன சாஃப்ட்வேர்கள் மற்றும் ஏஐ சாதனங்களை உக்ரைன் போர்க்களத்தில் களமிறக்கியுள்ளது.

குறிப்பாக, டிரோன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் பிற கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் திரட்டப்படும் பெருமளவிலான தரவுகளை ‘மேவன்’ (Maven) போன்ற அதிநவீன ஏஐ சாஃப்ட்வேர்கள் மிகக் குறைந்த நொடிகளில் பகுப்பாய்வு செய்கின்றன. இதன் மூலம் எதிரிப் படைகளின் தளங்கள், நகர்வுகள் மற்றும் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து உடனடித் தாக்குதல் முடிவுகளை எடுக்க உக்ரைன் ராணுவத்திற்கு இது பெரிதும் உதவுகிறது.

வல்லரசு நாடுகளின் ‘சோதனைக் களமாக’ மாறிய உக்ரைன்
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற உலக வல்லரசு நாடுகளும் நேட்டோ அமைப்பும் தங்களது புதிய பாதுகாப்புச் சாதனங்கள், ஏஐ கருவிகள் மற்றும் சாஃப்ட்வேர்களை நேரடிப் போர்க்களத்தில் சோதித்துப் பார்க்கும் முதன்மை சோதனைக் களமாகவே (Test Stage) உக்ரைனைப் பயன்படுத்தி வருகின்றன என்று சுகுமார் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் நிலை குறித்துப் பேசிய அவர், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் அளவுக்கு இந்தியா இன்னும் ஏஐ பாதுகாப்புத் துறையில் நுட்பமான வளர்ச்சியை எட்டவில்லை என்றும், இதற்குக் கோடிக்கணக்கில் (Billions of Dollars) முதலீடு தேவைப்படும் என்றாலும், வரும் காலத்தில் இந்தியா இந்த இலக்கை நிச்சயமாக அடையும் என்றும் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகுமா?
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற அச்சத்தைப் போக்கிய அவர், ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை முழுமையாகப் பறிக்காது என்றும், மாறாகத் திரும்பத் திரும்பச் செய்யப்படும் வழக்கமான வேலைகளை (Repetitive tasks) விரைவாகச் செய்து முடித்து மனிதர்களின் உற்பத்தித் திறனை (Productivity) அதிகரிக்கும் என்றும் கூறினார். இருப்பினும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தங்களை அப்டேட் செய்துகொள்ளாதவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தைச் சந்திப்பார்கள் என எச்சரித்தார்.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதற்குக் குறிப்பிட்ட பட்டப்படிப்பு எதுவும் தேவையில்லை என்றும், முறையான ஆர்வமும் சரியான பயிற்சியும் இருந்தால் எவர் வேண்டுமானாலும் இத்துறையில் சிறந்து விளங்க முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நேபாள பெருவெள்ளம்: 10 நிமிட டீ பிரேக்… 5 இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்!
