ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியேற்ற விசாக்களை இடைநிறுத்தம் செய்து வெளியிட்ட டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


வழக்கின் பின்னணி
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த விசா இடைநிறுத்த உத்தரவை எதிர்த்து இரு தொண்டு நிறுவனங்கள் உட்படப் பாதிக்கப்பட்ட நநபர்கள் சிலர் நியூயார்க் (New York) கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜேனட் வர்காஸ் (Jeannette Vargas), டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட இந்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் கூறி அதை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்:
சட்டத்திற்குப் புறம்பானது: நாட்டின் குடியேற்றச் சட்டத்தின் கீழ் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இதுபோன்ற மொத்தத் தடையை விதிக்க அதிகாரம் இல்லை.
அதிகார வரம்பு மீறல்: விசா தகுதிகளைத் தனிநபர் வாரியாக மதிப்பீடு செய்து வழங்கும் தனிப்பட்ட அதிகாரம் தூதரக அதிகாரிகளுக்கே (Consular Officers) உள்ளது என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, இடைநிறுத்தத்தால் நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
