சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது SK23 திரைப்படமும் உருவாகி வருகிறது. இதனை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 21 வது படமான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இதற்கிடையில் படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி அமரன் திரைப்படமானது 2024 அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் பரவி வரும் நிலையில் எதிர்பாராத விதமாக அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.