புதிய ஓய்வூதியத்திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு ஊழியர்களின் விபரங்களை அனுப்ப வேண்டுமென்று நிதித் துறை செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றிக்கையில் சி.பி.எஸ். என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சில அரசு ஊழியர்களை மாற்றியது தொடர்பான உத்தரவு மற்றும் அது பிறப்பிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளின் விவரங்கள், மேலும் அந்த உத்தரவை அமல்படுத்திய முறை ஆகியவை பற்றி ஏற்கனவே கடந்த ஜனவரி 31-ந் தேதியன்று விவரங்கள் கோரப்பட்டு இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையில் மேலும் சில விவரங்களை உடனடியாகத் தர வேண்டும் என்றும் அதன்படி, தலைமைச் செயலத்தில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள ஊழியர்கள் யாரையும் பழைய ஓய்வூயத் திட்டத்திற்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் அதன் தேதி, அதன் நகல் மற்றும் 2003-ம் ஆண்டில் இருந்து இதுவரை செயல்படுத்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசாணையின் மூலமாகவோ, சரிபார்த்தல் மூலமாகவோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளின் மூலமாகவோ, அதுதொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் மூலமாகவோ எந்த ஊழியராவது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விருப்பம் தெரிவிக்கும் அந்த ஊழியர்களின் விவரங்கள், இந்த பிரச்சினையில் தீர ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க தேவைப்படுவதால் அவற்றை பிப்ரவரி மாத இறுத்திக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று நிதித்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
