பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இந்திய அணி 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 18வது இடத்தை பிடித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த துளசிமதி, மனிஷா, ஸ்ரீநிதி ஆகியோர் பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்தினர்.


போட்டியின் இறுதி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்ததை அடுத்து, நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்தன.

முடிவில் இந்திய அணி 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 18-வது இடத்தை பிடித்துள்ளது. 94 தங்கம் உள்பட 220 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பிடித்தது. இன்று இரவு நடைபெறும் பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை பிரித்தி பால் ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.


