கால்பந்து ரசிகர்களின் உணர்வுகளையும், உலகக் கோப்பை வரலாற்றையும் பணமாக்கும் நோக்கில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா (FIFA) ஒரு புதிய அதிரடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நியூ ஜெர்சி மெட்லைஃப் (MetLife) மைதானத்தின் புல்வெளியில் இருந்து, சிறிய புல் துண்டுகள் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு நினைப் பரிசாக விற்பனை செய்யப்படவுள்ளன.


இதன் ஆரம்ப விலை 450 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹37,000 முதல் ₹43,000 வரை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஃபாவின் இந்த வினோதமான மற்றும் பிரம்மாண்டமான வியாபார உத்தி குறித்த விவரம் பின்வருமாறு:
அக்ரிலிக் பாக்ஸ் மற்றும் யுஎஸ்பி (USB) கேஜெட்டுடன் வரும் புல்!
பிஃபாவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளத்தில் இந்த விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. “வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் அசல் புல்வெளியின் ஒரு பகுதியை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற விளம்பரத்துடன் இது விற்கப்படுகிறது.
வாங்குபவர்களுக்கு இந்த புல் துண்டு சாதாரணமாக வழங்கப்படாது. அது அழுகிப் போகாதவாறு பிரீமியம் அக்ரிலிக் (Acrylic Case) பெட்டிக்குள் நிரந்தரமாகப் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படும்.
மேலும், அந்தப் பெட்டியின் மீது உலகக் கோப்பை லோகோ, இறுதிப் போட்டி நடக்கும் தேதி மற்றும் இறுதிப் போட்டியின் இறுதி ஸ்கோர் (Score) ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். இதனுடன், இது அசல் புல் தான் என்பதை உறுதிப்படுத்தும் ‘உரிமத் சான்றிதழ் வீடியோ’ அடங்கிய ஒரு நவீன யுஎஸ்பி (USB) சாதனமும் அத்துடன் வழங்கப்படுகிறது.
₹2.5 லட்சம் வரை விற்கப்படும் பிரீமியம் எடிஷன்!
இந்தப் புல் விற்பனையில் மொத்தம் நான்கு அடுக்குகள் (Tiers) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அடிப்படை விலை: 450 டாலர் (சுமார் ₹37,000+).
அடுத்தடுத்த பிரிவுகள்: 900 டாலர் மற்றும் 1,200 டாலர்.
ஹீரோ எடிஷன் (Hero Edition): இதன் உச்சக்கட்ட விலையாக 3,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹2.5 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையுயர்ந்த பேக்கில் 3 இன்ச் அளவிலான புல் துண்டுடன், தங்க முலாம் பூசப்பட்ட நினைவு டிக்கெட், மினியேச்சர் உலகக் கோப்பை பந்து மற்றும் கிரிஸ்டல் கிளாஸ் உலகக் கோப்பை டிராபி ஆகியவை வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 2,026 புல் துண்டுகள் மட்டுமே விற்கப்படவுள்ளன. இவை அனைத்தும் விற்றுத் தீர்ந்தால், பிஃபா அமைப்புக்குப் புல் விற்பனை மூலமாக மட்டுமே சுமார் 11.2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹93 கோடிக்கும் மேல்) வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மற்றும் ஆட்டக்காரர்கள் மத்தியில் சர்ச்சை
இறுதிப் போட்டி முடிந்த பிறகே இந்த புல் துண்டுகள் ஆர்டர் செய்தவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடரின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு (இறுதிப் போட்டி டிக்கெட்டுகள் ₹25 லட்சம் வரை) விற்கப்படுவதாகப் பிஃபா மீது ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அதோடு, மெட்லைஃப் மைதானத்தில் போடப்பட்டுள்ள இந்த இயற்கை புல்வெளி மிகவும் வறண்டு, விளையாடுவதற்கு மோசமாக இருப்பதாகப் பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட முன்னணி அணி வீரர்களே குற்றம் சாட்டியிருந்தனர்.
இப்படிப் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான அதே மைதானத்துப் புல்லை, பிஃபா அமைப்பு தற்போது கோடிகளில் லாபம் பார்க்கப் பயன்படுத்துவது கால்பந்து உலகினரிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
