
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் தொடரின் 10-வது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இத்தொடர், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக யூடியூப் (YouTube) தளத்தில் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
விறுவிறுப்பாக நடந்த மினி ஏலம்:

சென்னை சேப்பாக்கம் மைதான வளாகத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐ ட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீக்கம் மதுரை பாந்தர்ஸ், எஸ் கே எம் சேலம் பார்டன்ஸ் ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சிஇஓ-க்கள் பங்கேற்றனர்.
மொத்தம் பதிவு செய்திருந்த 783 வீரர்கள் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டனர்.
இந்த ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்ட டாப் 3 வீரர்கள்:
1. அஷ்வந்த் வல்தப்பா – ₹14.45 லட்சம் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்)
2. முகிலேஷ் – ₹13 லட்சம் (நெல்லை ராயல் கிங்ஸ்)
3. சித்தார்த் மகாதவேகன் – ₹8.7 லட்சம் (மதுரை பாந்தர்ஸ்)
ஆகஸ்ட் 28-ல் இறுதிப்போட்டி; யூடியூபில் இலவசம்
ஏலம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) தலைவர் டி.ஜே. சீனிவாசராஜ் கூறியதாவது: “10-வது சீசன் டிஎன்பிஎல் மினி ஏலம் சிறப்பாக முடிந்துள்ளது. இத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை போட்டிகள் நத்தம் (திண்டுக்கல்) மற்றும் சென்னை சேப்பாக்கம் மைதானங்களில் நடத்தப்படும். ஒளிபரப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் இரண்டாம் கட்ட போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தத் தொடர் சோனி (Sony) தொலைக்காட்சியில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. மேலும், இந்தியாவிலேயே முதல்முறையாக யூடியூப் நிறுவனம் Fan code செயலியுடன் ஒருங்கிணைந்து TNPL போட்டிகளை இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதனால் கட்டணமின்றி அனைவரும் போட்டிகளைப் பார்க்க முடியும். எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்கட்ட போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
”வீரர்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை” – சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் அதிரடி:
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன், ஏலம் தங்களுக்குச் சாதகமாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் பேசியதாவது:”எங்கள் அணியில் இருந்து அபராஜித், விஜய் சங்கர் ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்களை விதிமுறைகளின் (Limitations) காரணமாக இழந்த பிறகே இந்த சீசனைத் தொடங்குகிறோம். அவர்களுக்கு என் நன்றிகள். எனினும், இந்த ஏலத்தில் எங்களுக்குத் தேவையான நல்ல வீரர்களை எடுத்துள்ளோம்.
நாங்கள் ஏலத்தில் எடுத்த அஷ்வந்த் வல்தப்பா ஒரு ‘மிஸ்டரி ஸ்பின்னர்’. தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்குச் சென்ற வருண் சக்கரவர்த்தியைப் போல இவரையும் நாங்கள் உருவாக்குவோம். யூடியூபில் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பாவது டிஎன்பிஎல் எடுத்த மிகச் சிறந்த முடிவு. இதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
வீரர்களின் உரிமைக்கான குரல்:
டிஎன்பிஎல் தொடரில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஒரு அணியில் விளையாடும் வீரர் அதே அணியில் நீடிக்க வேண்டுமா அல்லது ஏலத்திற்குச் செல்ல வேண்டுமா என்ற முடிவு செய்யும் அதிகாரம் (Player Consent) அந்தந்த வீரர்களிடமே இருக்க வேண்டும். அணியில் உள்ள வீரர்கள் யாரும் அடிமைகள் இல்லை. ஒரு நல்ல வீரரைத் தக்கவைக்க அணி நிர்வாகம் விரும்பினாலும், அவர் ஏலத்திற்குச் சென்றால் அதிக விலைக்குப் போக வாய்ப்புள்ளது. எனவே, தக்கவைப்பு முறையில் வீரர்களின் சம்மதமும் சேர்க்கப்பட வேண்டும். இதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று சிவந்தி ஆதித்தன் பேசினார்.
