Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகை அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் களமிறங்கினால் இடதுசாரிகள் சும்மா இருக்க மாட்டாது: சிபிஎம் மாநிலச்...

ஆளுநர் மாளிகை அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் களமிறங்கினால் இடதுசாரிகள் சும்மா இருக்க மாட்டாது: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் களமிறங்க முயன்றால், இந்திய நாட்டின் கூட்டாட்சிக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாட்டின் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் வீதியில் இறங்கிக் களமிறங்கும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
​இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை வருமாறு:

பெ.சண்முகம்

we-r-hiring

​போட்டி அதிகார மையமாக மாறும் ஆளுநர் மாளிகை:
“மத்தியில் ஆளும் பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு இணையாக ஒரு போட்டி அதிகார மையத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். கூட்டாட்சிக்கு முற்றிலும் விரோதமாகச் செயல்படும் அதே வேலையைத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் தற்பொழுது ஆரம்பித்திருக்கிறார் என்பதையே அவரது மதுரை ஆய்வுக் கூட்டமும், வைகை ஆறு சீரமைப்பு பற்றிய அவரது சர்ச்சைக்குரிய கருத்தும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆளுநர் என்பது ஒரு நியமனப் பதவி ஆகும். அதன் எல்லைகளுக்குள் நிற்காமல், நேரடியாக அரசு நிர்வாக நடைமுறைகளில் தலையிட முயற்சிப்பது என்பது பன்வாரிலால் புரோகித் காலத்தில் துவங்கி, ஆர்.என்.ரவி காலத்திலும் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் ஆளுநர் அத்துமீறுவது, அதிகாரங்களை மையப்படுத்துவதற்கான பாஜக-வின் மறைமுக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசாங்க உருவாக்கத்தின் போதே ஆளுநர் அர்லேகரின் நடவடிக்கைகளில் சந்தேக நிழல் படர்ந்தது. அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு மாறாக அவர் அரசாங்க உருவாக்கத்தை இழுத்தடித்ததைத் தமிழ்நாடு கண்டது. ஒரு முழு நேர ஆளுநரே கூட இந்த நெறிகளை மீற முடியாது என்ற நிலையில், ‘பொறுப்பு ஆளுநராகத்தான் இருக்கிறோம்’ என்ற குறைந்தபட்சக் கட்டுப்பாடு கூட அவரிடம் இல்லை என்பது கண்டனத்திற்குரியது.

வைகை குறித்த ஆளுநரின் பேச்சு அபத்தமானது:
நேற்று மதுரையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை ஆளுநர் அர்லேகர் நடத்தியுள்ளார். அது முடிந்த பின் மதுரையில் நடைபெற்ற ‘வேர்களைத் தேடி’ என்ற நேதாஜியின் ஐ.என்.ஏ தொடர்பான நிகழ்ச்சியில் பேசும்போது, ‘வைகை ஆற்றை மதுரை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்; அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் ஆளுநர் மாளிகையே வைகையைச் சீரமைக்கக் களமிறங்கும்’ என்று பேசியுள்ளார்.
​இளைஞர்களுக்கு வைகையைச் சீரமைக்க வேண்டுகோள் விடுப்பது தவறில்லை; ஆனால், மாநில அரசை மீறி ‘ஆளுநர் மாளிகையே நேரடியாகக் களமிறங்கும்’ என்று சவால் விடுப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. அது அரசியல் சாசனம் அவருக்குத் தந்துள்ள அதிகாரமும் கிடையாது. இந்திய நாட்டின் கூட்டாட்சிக் கோட்பாடு பற்றி அவர் இதன் மூலம் இளைஞர்களுக்குத் தருகிற செய்தி முற்றிலும் அபத்தமானது.

மேலும், தேச பக்தி என்பது களத்தில் போய் போரிடுவது மட்டுமே அல்ல என்று அவர் தந்துள்ள விளக்கம், அவருக்கு ஆசி வழங்குகிற ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து முழுமையாக விலகி நின்ற வரலாற்றுப் பிழையை மறைப்பதற்காகவே ஆகும். தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ள பாஜக, தற்பொழுது குறுக்கு வழியில் ஆளுநரைப் பயன்படுத்தி அதிகாரத்தைச் சுவைக்கப் பார்க்கிறது.

இடதுசாரிகள் களமிறங்கும் – எச்சரிக்கை:
ஆளுநர் அர்லேகரின் மதுரை ஆய்வுக் கூட்டத்தையும், அவரின் சர்ச்சைக்குரிய தன்னிச்சையான உரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநர் தன்னுடைய அரசியல் சாசன விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்திக் கொள்ளத் தவறினால், தமிழ்நாட்டின் உரிமைகளையும், கூட்டாட்சிக் கோட்பாடுகளையும் பாதுகாக்க இடதுசாரி, ஜனநாயக சக்திகள் மிகப்பெரிய அளவில் வீதிமன்றத்தில் களமிறங்கும்” என்று பெ.சண்முகம் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ