Homeசெய்திகள்தமிழ்நாடுமதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; 2024 அரசாணையை ரத்து செய்தது சமூக அநீதி: மு.வீரபாண்டியன் கண்டனம்..!

மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; 2024 அரசாணையை ரத்து செய்தது சமூக அநீதி: மு.வீரபாண்டியன் கண்டனம்..!

-

- Advertisement -

மூ.வீர்பாண்டியன்
“மதம் மாறிய காரணத்தால் ஒருவருக்குச் சமூக நீதியை மறுப்பது நியாயமாகாது; எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

​இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட்டாட்சியர் நிராகரித்த மனு:

we-r-hiring

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம் நாட்டு குடிமக்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் சமய வழியில் நம்பிக்கை வைக்கவும், அதனைப் பின்பற்றவும் முழு உரிமை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

​மதம் மாறிய பிறகு, ‘சமீர்’ என்ற புதிய பெயரில் இஸ்லாம் மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவராகத் தன்னைப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழை வழங்குமாறு வட்டாட்சியரிடம் மனுச் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கை வட்டாட்சியரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தை அணுகினார்.

​மத அடையாளம் மாறினாலும் சாதி மாறுவதில்லை: 

நமது சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவரது “சாதி” அடையாளம் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மதம் மாறினாலும், அங்கு மத அடையாளங்கள் மட்டுமே மாறுகிறதே தவிர, அவரது சமூகச் சாதி அடையாளம் அப்படியேதான் தொடர்கிறது. சில தலைமுறைகளுக்குப் பிறகுதான் அதில் மாற்றம் பெறுகிறது என்பதுதான் நமது ஒட்டுமொத்த வாழ்க்கை எதார்த்த அனுபவமாகும்.

​இந்தச் சமூக வாழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான், மதம் மாறுபவர்களுக்கு இஸ்லாம் மதத்தின் கீழ் உள்ள 7 உள் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு முறையான அரசாணையை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணையின்படி, சமீருக்கு அவர் கோரிய சான்றிதழை வட்டாட்சியர் வழங்கியிருக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு சமூக அநீதி:

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை எல்லைக்கு வெளியே சென்றுள்ளது. கடந்த 1951-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட, தற்போதைய சமூக வாழ்நிலை எதார்த்தத்திற்கு மாறான கற்பிதமான கருத்தைப் பற்றிக் கொண்டும், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியும் சமீரின் முறையீட்டை நிராகரித்துள்ளது.

​வட்டாட்சியரின் உத்தரவை நியாயப்படுத்தியதோடு மட்டுமன்றி, சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையையே நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அப்பட்டமான சமூக அநீதியாகும்.

​மதம் மாறிய உடனே சாதிய வேற்றுமைகள் நொடியில் மறைந்து போகும் என்ற கனவு நிலையில் இருந்துகொண்டு, மதம் மாறியவர்களின் கோரிக்கையை நிராகரிப்பது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும், 2024-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையை நிலைநிறுத்தத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என சிபிஐ வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

MUST READ