அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களால்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் என்றும், அன்று ஒரே வார்த்தையில் 7000 கோடி ரூபாய் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர் என்றும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெற உள்ள ‘உழவர் தின மாநாடு’ மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:


ஜூலை 5-ல் உழவர் தின மாநாடு:
கடந்த காலங்களில் நடந்த விவசாயிகள் போராட்டங்களின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் ஜூலை 5-ஆம் தேதியை உழவர் தின மாநாடாக உழவர் உழைப்பாளர் கட்சி நடத்துகிறது. இந்த மாநாட்டில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள் மூலமாக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்து, விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளை எவ்வித போராட்டமும் இன்றி சுமுகமாக நிறைவேற்றிக் கொள்ள இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்துள்ளோம்.
விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலை இல்லாததால்தான் விவசாயிகள் கடனாளியாக மாறினர். எனவே, முதலமைச்சர் தனது தேர்தல் வாக்குறுதிப்படியும், விவசாயிகளின் கஷ்டங்களை மனதில்கொண்டும் கூட்டுறவு மற்றும் இதர கடன்கள் முழுவதையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை – அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு:
விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நிதியிருக்கை பற்றாக்குறையாக உள்ளது என்று அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களை முதலமைச்சர் நம்பிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். தற்போதைய முதலமைச்சருக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.
ஆனால், அன்று கலைஞர் அவர்கள் 7,000 கோடி ரூபாய் கடனை ஒரே வார்த்தையில் தள்ளுபடி செய்தார். அப்போது டிராக்டர் கடன், கோழிப்பண்ணைக் கடன் என அத்தனையும் ரத்தானது. தற்போது கடனைச் செலுத்திய பிறகுதான் சலுகைத்தொகை அறிவிக்கப்படும் என்ற அரசின் நிலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். கடன் தள்ளுபடியில் அதிகாரிகள் செய்யும் குளப்பங்கள் விவசாயிகளைத் துன்புறுத்துவதோடு, அவர்களைப் போராடத் தூண்டுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
முக்கியக் கோரிக்கைகள் மற்றும் நஷ்டஈடு:
சுவாமிநாதன் பரிந்துரை: பால், தேங்காய் உட்பட அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆனைமலை நல்லாறு திட்டம்: பி.ஏ.பி. பாசனப் பகுதியில் ஆண்டுதோறும் நீர்வரத்து குறைந்து வருவதால், உடனடியாக ‘ஆனைமலை நல்லாறு திட்டத்தை’ நிறைவேற்ற வேண்டும். மேலும், பி.ஏ.பி வாய்க்காலில் குழாய் வழித் தண்ணீர் திட்டமா அல்லது வாய்க்கால் வழித் திட்டமா என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.
கண்வலி விதைக்கு அரசு விலை: திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உற்பத்தியாகும் கண்வலி விதைக்கு இடைத்தரகர்கள் விலை நிர்ணயிப்பதைத் தடுத்து, அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இரு மடங்கு நஷ்டஈடு: போதிய நீர் கிடைக்காமல் நடவு நட்டுப் பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து, உடனடியாக இரு மடங்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
வெறிநாய் கடி – ஆடுகளுக்கு இழப்பீடு: வெள்ளகோவில், மூலனூர் பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் உரிமையாளர்களுக்கு அரசு இதுவரை இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது. மனிதர்களுக்குத் தீவிபத்து உள்ளிட்ட பாதிப்புகளின் போது உடனடியாக 5 லட்சம், 10 லட்சம் வழங்கும் அரசு, இரவு பகலாகக் காவல் காத்து வளர்த்த ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
