Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவிலிருந்து தவெக-விற்கு தாவிய சி.விஜயபாஸ்கர்: "துரோகி ஒழிக!" என தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை நிர்வாகிகள் முழக்கம்

அதிமுகவிலிருந்து தவெக-விற்கு தாவிய சி.விஜயபாஸ்கர்: “துரோகி ஒழிக!” என தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை நிர்வாகிகள் முழக்கம்

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் திரண்டு, அவருக்கு எதிராக “துரோகி ஒழிக” என முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சி. விஜயபாஸ்கர்

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அடுத்தகட்ட பணிகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்ட வாரியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

we-r-hiring

தலைமை அலுவலகத்தில் அதிரடி முழக்கங்கள்:
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிரடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென சி.விஜயபாஸ்கருக்கு எதிராக, “கட்சிக்குத் துரோகம் செய்த விஜயபாஸ்கர் ஒழிக!” என்றும், “அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடியார் வாழ்க!” என்றும் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் ராயப்பேட்டை கட்சி அலுவலக வளாகத்தில் சற்று நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

சொத்தைக் காக்க ஓடிய துரோகிகள்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள், “கட்சியின் உண்மையான தொண்டர்கள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் எப்போதும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே உறுதியாக நிற்பார்கள். சுயநலத்திற்காகவும், தங்களது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மட்டுமே துரோகிகள் தற்பொழுது தவெகவிற்குச் சென்றுள்ளனர்” என்று மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

குட்கா வழக்கு உள்ளவரை தவெக சேர்த்தது எப்படி? – புதிய மாவட்ட செயலாளர் கேள்வி:
இதனைத் தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர் தவெகவிற்குச் சென்றதால், அவருக்குப் பதிலாக புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராக அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ள பழனிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். ​அப்போது அவர் பேசுகையில், “அதிமுக மூலமாக அனைத்துப் பதவிகளையும் அனுபவித்து, கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டுத் தற்போது கட்சிக்கு விஜயபாஸ்கர் துரோகம் இழைத்துள்ளார். அவர் மீது குட்கா வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தங்களை ‘தூயசக்தி’ என்று கூறிக்கொள்ளும் தவெக தலைமை அவரை எப்படித் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டது என்றே தெரியவில்லை.

அவர் சென்றதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவிற்கு எவ்வித பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மாவால் கட்சியில் இருந்த துரோகிகள் எல்லாம் தற்பொழுது தானாகவே வெளியேறிவிட்டார்கள். அடுத்து வரவிருக்கும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 100 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று சவால் விடுத்துத் தெரிவித்தார்.

MUST READ