கடந்த ஆண்டு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள இந்த மனு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணையில் தாக்கம் ஏற்படும்:
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெகவினர் பொதுவெளியில் தொடர்ந்து கருத்துக்களைப் பேசி வருகின்றனர். இது குறித்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள சூழலில், அது குறித்து பொதுவெளியில் பல்வேறு கருத்துக்களைப் பேசுவது விசாரணையின் போக்கை திசைதிருப்பும்; மேலும், இது விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை:
மேலும் அந்த மனுவில், “இது போன்ற பொதுவெளிப் பேச்சுகள் மற்றும் கருத்துக்கள் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைப்பதற்கும் வழிவகை செய்யக்கூடும். எனவே, இது தொடர்பாக தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்றும் கோரப்பட்டுள்ளது.
விசாரணை வளையத்தில் உள்ளவர்கள் பேச தடை:
சிபிஐ விசாரணை முழுமையாக முடிவடையும் வரை, இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் இருக்கக்கூடிய முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட இந்த வழக்குடன் தொடர்புடைய நபர்கள் எவரும், பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ இது குறித்து எவ்வித கருத்துக்களையும் பேசக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண உதவிகளுக்கு வழிகாட்டுதல் தேவை:
அதேபோல், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை, இழப்பீடு மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்க தவெக அரசுக்கு முழு சுதந்திரம் இருந்தாலும், சிபிஐ விசாரணை நடைபெறும் இந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றம் வகுக்கும் முறையான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அத்தகைய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
