முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் 100-வது நாள் இன்று. இதைக் கொண்டாடும் வகையிலோ அல்லது நியாயப்படுத்தும் வகையிலோ ‘யுகத்திற்கான ஆட்சி’ என முதலமைச்சர் தரப்பு மார்தட்டிக் கொள்கிறது. ஆனால், களநிலவரமோ வேறாக இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் ஊதியமும் சலுகையும் பெற்றுக்கொண்டு, சட்டமன்றத்திற்குக்கூட வராமல் விழாக்களில் பங்கேற்பதுதான் ‘யுகத்திற்கான ஆட்சி’யா? என்ற ஆக்ரோஷமான கேள்வி இன்று சாமானிய மக்களிடையே எழுந்துள்ளது.
யுகமாக நீளும் நூறு நாட்கள்: பொறுமை இழந்த மக்கள்!
ஆட்சியில் 100 நாள் என்பது ஒரு அரசாங்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் காலக்கெடு. ஆனால், இந்த நூறு நாட்களில் தமிழகம் அடைந்திருக்கும் முன்னேற்றம் என்ன? கொலை, கொள்ளை, போதைப்பொருள் கலாச்சாரம் என தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த அரசைப் பார்த்து மக்கள், “ஒரு நிமிடம் கடப்பதே ஒரு யுகமாக இருக்கிறது” என்று பெருமூச்சு விடுவதை ஆட்சியாளர்கள் காதுகொடுத்துக் கேட்கப் போகிறார்களா?

தண்டப்படையாக மாறிய ‘படை’கள்!
’சிங்கப்பெண்’ படை என்றும், அதிரடிப் படை என்றும் பெயர் சூட்டி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதில் காட்டும் அக்கறையை, களத்தில் போதைப்பொருளை ஒழிப்பதில் காட்டத் தவறிவிட்டனர். கோவை அமுதனும், திருவெற்றியூர் தனுஷும் உயிரைப் பறிகொடுத்தும், இன்னும் “எங்கள் ஆட்சியில் அது நடக்கவில்லை, உங்கள் ஆட்சியில் நடக்கவில்லையா?” என்று பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு. முந்தைய ஆட்சிகளைச் சுட்டிக்காட்டி தப்பிப்பது, தாங்கள் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்வதற்குச் சமம்!
சட்டமன்றத்தைப் புறக்கணிக்கும் முதலமைச்சர்: இது ஜனநாயகமா?
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நாளில், சட்டமன்றத்திற்கு வராமல் விழாக்களைக் காரணம் காட்டித் தப்பிப்பது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியின்றி, துறை சார்ந்த அமைச்சர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? பட்டன்களை அமுக்கி விழாவைத் திறப்பதைவிட, மக்களின் உயிரைக் காக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா?
அண்ணாமலையின் ‘ஒரு வருட’ மர்மம்!
அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும், ஆதாரங்களையும் வைத்திருக்கும் அண்ணாமலை, அதற்கான தீர்வு காண ஒரு வருடம் காலக்கெடு விதிக்கிறார். ஊழல் ஆதாரங்களை வைத்திருக்கிறோம் என்று சொல்லும்போதே அதை வெளியிடாமல், “ஓராண்டு கழித்துத் தருகிறேன்” என்று கூறுவது என்ன மாதிரியான அரசியல்? ஊர் எரிந்துகொண்டிருக்கும்போது, ஒரு வருடம் கழித்துத் தண்ணீரை ஊற்றுவோம் என்று சொல்வது போன்று, இந்த மர்மமான காலக்கெடு மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
யுகப் புரட்சி அல்ல, இது அதிகாரப் பித்தலாட்டம்!
தகவல் தொழில்நுட்பம் பெருகிய இன்றைய காலத்தில், மக்கள் எதையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். யுகப் புரட்சி என்று பெயர் சூட்டிவிட்டு, மக்களின் அடிப்படைப் பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாமல் திணறும் இந்த அரசு, இனிமேலும் தனது தோல்விகளைப் பழைய ஆட்சிகளின் தலையில் சுமத்த நினைத்தால், அது பெரும் ஆபத்தில் முடியும். ”தண்டப்படை” என்று மக்கள் முத்திரை குத்திய பிறகு, இனியும் காலம் கடத்தாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே இந்த அரசுக்கு நல்லது. இல்லையெனில், வரலாறு இந்த நூறு நாளை ‘இருண்ட யுகம்’ என்றே பதிவு செய்யும்!
திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?
