தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த 3-வது அறிவிப்பும் உழவர் பெருமக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையும் ஏமாற்றமும்
கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு வெளியிட்ட முதல் இரண்டு அறிவிப்புகளையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, சென்னையில் 11 விவசாயச் சங்கங்கள் இணைந்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கின.

காவல்துறை அழைப்பின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் 8 அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கடன் தள்ளுபடி வரம்பை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை விவசாயச் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர். முதலமைச்சரிடம் பேசி நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற உறுதியின் பேரில் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
அரசு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்!
இந்த நிலையில், சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து பி.எஸ்.மாசிலாமணி கருத்து தெரிவிக்கையில், “முந்தைய அறிவிப்புகளில் கடன் தள்ளுபடி அளவில் மட்டுமே ஏமாற்றம் இருந்தது. ஆனால் தற்போதைய அறிவிப்பு த.வெ.க. அரசின் மீதான நம்பிக்கையையே முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது. நிதி மேலாண்மையில் உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். பயிர்க்கடன் தள்ளுபடியில் அடுக்கடுக்கான குழப்பங்களும் குளறுபடிகளும் நிலவுகின்றன. உழவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற அமைச்சர்கள் தவறிவிட்டனர்” எனச் சாடினார்.
மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் எச்சரிக்கை
விவசாயிகள் மட்டுமின்றி சங்கம் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்களும் தற்போது வஞ்சிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் அனைத்துச் சங்கங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் நிர்பந்தத்திற்குத் த.வெ.க. அரசு தங்களைத் தள்ளியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
