
அரசாங்க உத்தரவின்றி தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதம் எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுதியுள்ளார்.
இது தொடர்பாக சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

ஏழை, எளிய மக்கள் கடும் அவதி
“தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பேருந்து நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகரப் பேருந்துகள் (Town Buses) மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் (Mofussil Buses) தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
உதாரணமாக, இதுவரை 10 ரூபாயாக இருந்த கட்டணம் தற்பொழுது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக உள்ள பொதுப்போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் கட்டண உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி செலவினத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் தினசரி வேலைக்குச் செல்வோர் மற்றும் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.”
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது:
“அரசின் முறையான உத்தரவும், அனுமதியும் இன்றி பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். ஆனால், இந்த சட்டவிரோத கட்டண உயர்வுக்கு எதிராகத் தற்போதைய போக்குவரத்துத்துறை அதிகாரிகளோ அல்லது அந்தந்த மாவட்ட நிர்வாகங்களோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும் காணாமலும் இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.”
உடனடியாகத் திரும்பப் பெறுக:
“எனவே, பொதுமக்களின் நலனை முழுமையாகக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். தனியார் பேருந்து நிறுவனங்கள் தன்னிச்சையாக மேற்கொண்டுள்ள இந்தச் சட்டவிரோத கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கு உரிய கடுமையான சட்ட நடவடிக்கைகளை மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு உறுதியாக வலியுறுத்துகிறது.”
