நடிகை ஸ்ருதிஹாசன், தக் லைஃப் படத்தின் தோல்வி என் அப்பாவ பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் படமானது படுதோல்வி அடைந்தது. பலரும் இப்படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்தனர். ‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படம் கமல்ஹாசனுக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சருக்குகளை சந்தித்தது படக்குழுவினருக்கும், கமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. எனவே தொடர் தோல்வி படங்கள் கமல்ஹாசனை பாதித்திருக்கக்கூடும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதன்படி அவர், “தக் லைஃப் படத்தின் தோல்வி என் அப்பாவை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை. அவர் எப்பொழுதுமே தன்னுடைய பணத்தை சினிமாவில் தான் மீண்டும் போடுவார். பணத்தை வைத்து புதிய வீடு, கார் என்று வாங்க அவர் விருப்பப்பட மாட்டார். எல்லாம் சினிமாவுக்குள் தான் போகும். மக்கள் நினைப்பது போல் இந்த நம்பர் கேம் அப்பாவை பாதித்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.