அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அதைத் தொடர்ந்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்த படம் ராஜ்குமார் பெரியசாமிக்கு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கும் நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். தற்காலிகமாக ‘D55’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ராஜ்குமார் பெரியசாமி, பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் என ஏற்கனவே தகவல் கசிந்தது. அதன்படி இவருடைய பாலிவுட் அறிமுக படத்தை இந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள இந்தி படத்தில் விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.