பாமகவில் இருந்து அன்புமணியை நீக்குவது உறுதி என்றும், அதற்கான நடவடிக்கைகளை ராமதாஸ் சரியான முறையில் மேற்கொண்டு வருகிறார் என்று அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இது தொடர்பாக அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராமதாஸ் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவருக்கு அன்புமணி எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றவர்கள் எல்லாம், ஒரு காலத்தில் அன்புமணிக்கு பயந்து கைகட்டி நின்றவர்கள் தான். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க சொன்னால், அன்புமணி பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்தால், அவர்களை நன்றாக உபசரித்து வழியனுப்பி வைக்கிறோம் என்கிறார். இன்றைக்கு மகளிர் மாநாட்டிற்கு ராமதாசுடைய மகளை அழைத்து வந்துள்ளார். பாமக என்பது சமூகநீதிக்கான கட்சியாகும். அனைத்து சகோதர சமுதாயத்தினரையும் நாங்கள் போராட்டத்திற்கு அழைக்கிறபோது, உங்களால் அரசாங்கத்திடம் கேட்டு எதையும் செய்துகொள்ள முடியாது. நாங்கள் உங்களுக்கு வாங்கித் தருகிறோம். சமூகநீதிதான் எங்களுடைய கொள்கை என்று சொன்னோம். அப்படி போராடிய நாங்கள், அவர்களை நடுரோட்டில் தான் விட்டோம். முதலில் சமூகநீதிக்கான கட்சி பாமக. பின்னர் சாதிக் கட்சி. தற்போது குடும்ப கட்சியாகிவிட்டது. அதற்கான வேலைகள் தான் நடக்கிறது.
ராமதாஸ் ஒரு போதும் கட்சியை விடமாட்டார். ஏன் என்றால் அவர் புத்திசாலித்தனமாக அனைத்து வேலைகளையும் செய்துவிட்டார். முதலில் நிர்வாகக்குழு முக்கியம். 19 பேர் இருந்த குழுவை 21ஆக மாற்றி அமைத்துவிட்டார். அடுத்து செயற்குழுவில் இருந்த எல்லோரையும் மாற்றிவிட்டார். பொதுக்குழுவிலும் ஆட்களை போட்டு கொண்டுவந்து விட்டார். தற்போது ராமதாஸ் சொன்னால், அவர்தான் பொதுக்குழு. பாமகவின் அங்கீகாரம் 2009ஆம் ஆண்டே போய்விட்டது. அதனால் அங்கீகாரம் இல்லாத கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. பாமகவில் தற்போது உண்மை தொண்டர்கள் கிடையாது. காசு கொடுத்துதான் ஆட்களை கூட்டி வருகின்றனர். பாமக மகளிர் அணியை வைத்து மதுஒழிப்பு போராட்டம் நடத்தினார்கள். விதவைகள் போன்று போராட்டம் நடத்திய அவர்கள், கடைசியில் பீர் குடித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ராமதாசுக்கு எதிராக 29 வழக்குகள் தொடர்ந்துள்ளேன். ஆனல் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் பாமக நாங்கள் வளர்த்த கட்சியாகும். அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிந்த நான், வன்னிய சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலையைவிட்டு வந்தோம். வந்த வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அப்படி செய்ததால் எனக்கு நக்சலைட் என்று பட்டம் கொடுத்தனர். அன்புமணியை பொருத்தவரை அவருக்கு கட்சி வேண்டும். அதை விட்டுத்தர மாட்டேன் என்று சொல்கிறார். அன்புமணியை கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று 2009ஆம் ஆண்டு முதலே முயற்சித்து வருவதாக அவர்களே சொல்கிறார்கள். பாமகவில் தலைவர் பொறுப்பு 3 வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கிறார்கள். அடுத்து பதவிக்காலத்தை நீட்டிப்பதாக இருந்தால் ஒரு வருடத்திற்கா கொடுப்பார்கள். மூன்று வருடத்திற்கு அல்லவா நீட்டிப்பு வழங்கி இருக்க வேண்டும்? அப்போதே சட்டத்தில் அன்புமணி தரப்பு பலவீனமாக உள்ளதாக தானே அர்த்தம்.
திமுகவில் கலைஞர் கடைசி வரை பதவியை விட்டுத்தரவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பொறுப்பை கொடுத்தார்கள். ஆனால் அன்புமணிக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கியபோது நான் செயல்படாத தலைவரா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு காரணம் அன்புமணியின் அவசரம்தான். சிறிய வயதிலேயே அன்புணிக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வாங்கி கொடுத்தார். பாமகவில் பலரும் அப்படிதான் உள்ளனர். இன்றைக்கு கட்சிக்கு வந்தால் உறுப்பினர், மறுநாள் மந்திரி. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ரஜேஸ்வரி பிரியா காலையில் வந்தார். மதியம் பதவி வழங்கப்பட்டது. பொங்கலூர் மணிகண்டன் காலையில் வந்தார். மதியம் பதவி வழங்கினார்கள். பாமகவில் சட்டவிதிகளின் படி ஒருவரை நீக்குவதாக இருந்தால் 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும். அதன்படி அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள். 2 வார காலத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறபோது அவர் பதில் அளிக்க மாட்டார்.
ராமதாஸ் முதலில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை பாமகவின் தலைவர் பதவியை வகிப்பதாக சொன்னார். ஆனால் அதற்கு அன்புமணி ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தனது உயிர்மூச்சு உள்ளவரை பாமகவின் தலைவராக இருப்பேன் என்று சொல்லிவிட்டார். வன்னியர் சமுதாயத்தில் 3 கோடி பேர் உள்ளனர். ஆனால் பாமக வாங்குகிற வாக்கு எவ்வளவு. எத்தனை சதவீத வாக்குகள்? பாமக என்பது பணத்திற்கான, மகனுக்கான ஒரு கட்சி. தற்போது பணம் ஒரு பிரச்சினையாகி விட்டது. அன்புமணியை தனியாக கட்சி தொடங்குங்கள். நான் வாழ்த்துகிறேன் என்று ராமதாசே சொல்கிறார். கட்சி தொடங்கி எங்காவது போய் பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார். அன்புமணிக்கு நெருக்கடி ஏற்படுத்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அவர் தனிக்கட்சியை தொடங்குவார். அவருக்கு போக்கிடம் கிடையாது.
ராமதாஸ், கட்சி கொடியை அன்புமணி பயன்படுத்தக்கூடாது. கட்சியினுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது. தன்னுடைய பெயரையே பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கினால் வாழ்த்துவதாகவும் சொல்கிறார். அப்போது இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம். ராமதாஸ் மனைவியின் பிறந்தநாளின் போதுஅன்புமணி தைலாபுரம் வீட்டிற்கு வந்து கேக் வெட்டுகிறார். எதிரியாக இருந்தாலும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது. ராமதாசை, அன்புமணியின் ஐ.டி.விங்கை சேர்ந்தவர்கள் தான் கடுமையாக விமர்சிக்கின்றனர். ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலால், பாமக என்கிற கட்சி காணாமல் போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.