நடிகர் நிவின் பாலியின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இருப்பினும் சில படங்கள் நிவின் பாலிக்கு தோல்வி படங்களாக அமைந்தன. இவரது நடிப்பில் தற்போது ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர தமிழில் நிவின் பாலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் நிவின் பாலி. மேலும் கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்திலும் நிவின் பாலியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு அவரை அணுகியதாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த படத்தில் நிவின் பாலியால் நடிக்க முடியவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் நிவின் பாலியின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளாராம். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இது அரசியல் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.