தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் தொழிலாளர்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை மட்டும் தமிழ்நாட்டிடம் வழங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளால் ஏற்பட போகும் ஆபத்துக்கள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் காரணமாக பீகாரில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கம் என்பது பீகார் மட்டும் அல்ல. தமிழ்நாடும் தான். 11 மாநிலத்திற்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டில் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம். அப்போது இது தமிழ்நாட்டை தான் பெரிய அளவில் பாதிக்கும்.
இது திட்டமிட்ட சதியாகும். இதில் தேர்தல் ஆணையத்தின் பங்கும் இருக்கிறது. தமிழ்நாட்டில் பீகார் மட்டுமின்றி, உ.பி., மேற்குவங்கத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் இவர்கள் பீகாரில் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை மட்டும் தமிழ்நாட்டிடம் வழங்குகிறார்கள். இதன் மூலம் என்னுடைய சந்தேகம் வலுப்படுகிறது. திட்டம் போட்டு பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை வாக்காளர்களாக சேர்க்க உள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஒரு நபர் வாக்காளராக சேர்ப்பதற்கு அங்கு எவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்கிற வரம்பு விதிக்கப்படவில்லை. ஒரு நபர், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு வந்தால் கூட அவர் இனி இங்குதான் இருக்கப் போகிறேன் என்று சொல்லி வாக்காளராக பதிவு செய்ய முடியும். எனவே இது திட்டமிடப்பட்ட சதி என்று எனக்கு உண்மையாகவே அச்சமாக உள்ளது. இதை தெளிவுபடுத்த வேண்டியது இந்திய தேர்தல் ஆணையம் தான்.
பீகார் வாக்காளர் பட்டியல் விவரங்களை தமிழ்நாட்டிடம் வழங்கும் அதே நேரத்தில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுக துன்புறுத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். நான் கேட்கிறேன் திமுகவின் கொள்கை, கோட்பாடுகளில் தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு இடமில்லை என்று இருக்கிறதா? மாறாக ஆர்.எஸ்.எஸ்ன் கொள்கை இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும். அங்கு இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டா?. அதேபோல் திமுகவிடம் ஏதும் கொள்கை உள்ளதா?

தமிழ் பயிற்று மொழியாக்கும் திட்டத்திற்கு இந்த அரசிடம் ஆதரவே இல்லை. இது தொடர்பாக 2 முறை முதலமைச்சரை சந்தித்தேன். அவர் இந்த திட்டத்தை ஆதரித்து தான் பேசினார். என்னுடைய கருத்துக்களை கவனமுடன் கேட்டார். ஆனால் அதற்கு பிறகு அரசில் எதுவும் நடக்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன். மறுநாள் காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்-ஐ தொடர்புகொண்டு, முதலமைச்சர் தன்னிடம் பேசியதாகவும், என்ன பிரச்சினை என்று உங்களிடம் பேச சொன்னதாக கூறினார். நான் பிரச்சினையை விளக்கியபோது, உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு பாலகிருஷ்ணன் மூலம் நிதி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அரசு வழங்கும் நிதி போதாது. இருந்தபோதும் கொடுக்கும் நிதியை கொடுங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, தங்களிடம் நிதி இல்லை என்றார். அரசு கொடுத்தால் தங்களால் நிதி வழங்க முடியும் என்றார். இது குறித்து அமைச்சர் அன்பில் மகேசிடம் பேசியபோது, அவர் பின்னர் அழைப்பதாக சொன்னார். ஆனால் அதன் பிறகு அழைக்கவில்லை. முதலமைச்சரே ஆர்வம் காட்டுகிறபோதும் இந்த அரசில் சில காரியங்கள் மெத்தனப்படுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது.

பீகார் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் சேர்ப்பதன் மூலம் பல இடங்களில் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கக் கூடிய இடத்திற்கு வந்துவிடுவார்கள். குறிப்பாக திருப்பூரில் அவர்களால் அதை செய்ய முடியும். வெளியூர்களில் இருந்து வேலைக்கு வருபவர்களிடம் பணிக்கான ஆவணங்களை கேட்பது சரியானதுதான். தமிழ்நாட்டில் கட்டிட தொழிலாளர்களுக்கு தேவை இருக்கிறபோது பீகார், மேற்குவங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வரத்தான் செய்வார்கள். அதேவேளையில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பும் முக்கியமாகும்.
யாரை வேலைக்கு எடுத்தாலும் ஒர்க் பர்மிட் வேண்டும். வருபவர்களின் விவரங்கள் வேண்டும் என்று காவல்துறை கேட்க முடியும். நாளைக்கு உள்ளுர் நபர், வெளியூர் ஆட்களை தாக்கினாலோ, அல்லது வெளியூர் நபர்கள் உள்ளூர் ஆட்களை தாக்கினாலோ அவர்கள் குறித்த விவரங்கள் தெரியும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதில் எந்த தவறும் கிடையாது. இப்படி கட்டுப்பாடு விதிப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் முக்கியமானதாக இருக்கும்.

தமிழ்நாட்டிற்கு பீகாரில் இருந்து மட்டும்தான் புலம் பெயர் தொழிலாளர்கள் வந்துள்ளனரா? அப்போது தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியல் விவரங்களை மட்டும் தமிழ்நாட்டிடம் வழங்குவது ஏன்? இதில் இருந்தே இது ஒரு சார்புடைய நடவடிக்கை என்பது தெரிந்துவிடும். பீகாரில் தேஜஸ்வி யாதவை பலவீனப்படுத்த வேண்டும். அதற்கு பீகாரிகளை துன்புறுத்துகிறார்கள். தேஜஸ்வி எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்று சொல்லி அவரை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள்.
அடுத்தபடியாக பீகார் வாக்காளர் பட்டியல் விவரங்களை கொண்டுவந்து அவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கலாம். முதலில் எதற்காக பீகார் வாக்காளர் பட்டியல் விவரங்களை மட்டும் வழங்கினார்கள் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் உடனடியாக இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் அந்த தொகுதியின் உறுப்பினரை நிர்வாகிக்கும் நபர்களாக மாறக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


