இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டம்.
திருப்பரங்குன்றத்தில் இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர்.
உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?

திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும் இந்து மதவெறியர்களை பயன்படுத்தி, தற்போது தனது கலவரத் திட்டத்தை வேகப்படுத்துகிறது. அதன் சிறு அங்கமாகத்தான் கடந்த இரண்டு மாத காலமாக, மதுரையில் மதவெறியூட்டும் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது.
மலை யாருக்கு சொந்தம்?
திருப்பரங்குன்றம் மலையில் சொத்துரிமை தொடர்பான பிரச்சினை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே எழுப்பப்பட்டது. 1920-ஆம் ஆண்டு இரயில்வே பாதைகள் அமைக்கவும், குவாரிகள் அமைக்கவும் திருப்பரங்குன்றம் மலையைக் கையகப்படுத்தும் முயற்சிகளை பிரிட்டிஷ் அரசின் வருவாய்த்துறை மேற்கொண்டது. இதற்கு எதிராக, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேவஸ்தானம் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் தர்கா நிர்வாகமும் மனுதாரராக இணைக்கப்பட்டது.
1923-ல் வழக்கு கீழமை நீதிமன்றத்தின் முதன்மை கூடுதல் நீதிபதியாக இருந்த பி.ஜி. இராம ஐயர் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, 21 சாட்சிகளை விசாரித்தார். 25-08-1923 அன்று அவர் வழங்கிய தீர்ப்பில், நெல்லித்தோப்பு, அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லித்தோப்பில் இருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், பள்ளிவாசல் மற்றும் கொடிமரக் கம்பம் ஆகியவை இஸ்லாமியர்களின் சொத்தாகும் என்றும், மலையின் பிற பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதை, முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்குச் சொந்தமானவை என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது வருவாய்த்துறைக்குச் சாதகமாக முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, அன்றைய உச்சநீதிமன்றமான இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் (Privy Council) 25-08-1923 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், பி. வி. இராம ஐயர் வழங்கிய தீர்ப்பினை உறுதிப்படுத்தி, 12-05-1930 அன்று உத்தரவு வழங்கப்பட்டது.
அதன் பின்னர், தர்காவில் வழிபாடு நடத்தவும், உணவு சமைப்பதற்கும் தேவையான நீரை சிவன் கோயில் (காசி விசுவநாதர் கோயில்) சுனையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். கோடைக் காலங்களில் நீரின் அளவு குறைவதால், இருதரப்பினருக்கும் இடையே சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதனால், தர்கா நிர்வாகம், தர்காவிற்குச் சொந்தமான இடத்திலேயே சுனை கட்டும் பணியை மேற்கொண்டது.
இதை எதிர்த்து, சுனை கட்டுமிடம் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என அறிவிக்கக்கோரி, கோயில் நிர்வாகம் சார்பாக 1975-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.சுப்பிரமணியன், முந்தைய 1920-ஆம் ஆண்டு பி.ஜி. ராம ஐயர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், வழக்கில் குறிப்பிடப்பட்ட இடம் தர்காவிற்கே சொந்தமானது என்றும், சுனை கட்ட தடை போட முடியாது என்றும் 22-11-1978 அன்று தீர்ப்பளித்தார்.
மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தர்காவிற்குச் சொந்தமான இடங்களைக் கோயிலுக்கு சொந்தமானவை என அறிவிக்க முயன்றது. ஆனால், அனைத்துத் தீர்ப்புகளும் தர்கா நிர்வாகத்திற்கு ஆதரவாகவே வந்துள்ளன. ஆனால், 1931-ஆம் ஆண்டு லண்டன் பிரிவு கவுன்சிலின் தீர்ப்பில் முழு மலையும் முருகனுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டதாக எச்.ராஜா உள்ளிட்ட இந்து மதவெறியர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் அயோத்தியாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் தொல்லியல் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பாபர் மசூதி, 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இராமன் அங்கு பிறந்தார், அவ்விடத்தில் இராமன் கோயில் இருந்தது என்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், கரசேவை நடத்தி மசூதியை இடித்தது. இதையே முன்மாதிரியாக வைத்து, நாடுமுழுவதும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பிரச்சாரங்களைத் சங் பரிவார் கும்பல் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் மலையும் இப்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவேதான், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று எச்.ராஜா திமிர்த்தனமாகப் பேசித் திரிகிறார். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மேலே, 50 அடி உயரத்தில் 300 ஆண்டுகள் பழமையான தீபமேற்றும் பீடம் உள்ளது. தமிழ்நாடு முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் அங்கு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
ஆனால், “தர்காவிற்குச் சொந்தமான கொடிமரம் அமைந்துள்ள பகுதியில்தான் தீபம் ஏற்றவேண்டும், அது இந்துக்களின் நம்பிக்கை” என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்-ன் வானரப்படைகளில் ஒன்றான “இந்து பகத் சன சபை”யின் தலைவர் வி.தியாகராஜன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெ. கனகராஜ், 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானது என்றும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் இந்தப் பகுதியின் பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 24-11-1994 அன்று உத்தரவிட்டார்.
இதையெல்லாம் மதிக்காத பாசிச கும்பலோ, கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை, அப்பகுதி மக்களிடையே விதைக்க முயற்சித்து வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு, நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகையைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொழுகை செய்வதைத் தடுக்க முடியாது எனவும் அந்த வழக்கில் எவ்வித இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் 27-06-2023 அன்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
இவ்வாறாக, 1920 முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் சிக்கந்தர் தர்கா, பள்ளிவாசல், கொடிக்கம்பம் அமைந்துள்ள மலையுச்சி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்பது சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறான பரப்புரையைத் திட்டமிட்டே செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளே இதுவரை பலியிடப்படாதது போலவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகவும், முருகன் மலையை சிக்கந்தர் மலையாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கதையளந்து, கலவரம் நடத்த முயற்சிக்கிறது இந்து முன்னணி கும்பல்.
கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய அரிட்டாபட்டியைச் சேர்ந்த மக்கள், டங்ஸ்டன் திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த, கிடா வெட்டுவதற்காக சிக்கந்தர் தர்காவிற்குச் சென்றனர். அப்போது அங்கு கிடா வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திருப்பரங்குன்றம் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு சென்ற மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல, இந்துக்கள்தான். எனவே, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அமைந்திருப்பது பற்றியோ, அங்கு பலியிடுவது பற்றியோ அப்பகுதி இந்து மக்கள் யாரும் புகார் அளித்ததில்லை. இந்து மக்களும் இணைந்தே அங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். ஆனால், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலானது அயோத்தியில் கலவரம் செய்து பாபர் மசூதியை இடித்ததைப் போல, திருப்பரங்குன்றத்திலும் அரங்கேற்ற வேண்டுமென 30 ஆண்டு காலமாக வெறிகொண்டு அலைகிறது.
ஆனால், இந்து – இஸ்லாமிய மக்களின் மதநல்லிணக்கத்தை அக்கும்பலால் உடைக்க இயலவில்லை. இத்தகைய ஒற்றுமைதான் இந்துத்துவப் பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்காக இருக்கிறது. அதைத் தகர்ப்பதன் ஊடாகவே தமிழ்நாட்டில் வேரூன்ற முடியும் என்பதை உணர்ந்து, வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறது.
வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!


